சென்னை: தமிழகத்தில் கிராமக் கோயில் பூசாரிகளின் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது,
கிராமக் கோயில் பூசாரிகளின் ஓய்வூதியம் குறித்து 2020-21 பட்ஜெட் கூட்டத்தொடரில் பேரவைவிதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறைஆணையரின் கருத்துருக்களை அரசு பரிசீலனை செய்தது.
இதையடுத்து, கிராமக் கோயில்பூசாரிகள் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் பயனாளிகள் எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கிராமக் கோயில்களில் 20 ஆண்டுபணிபுரிந்து 60 வயது நிறைந்த ஓய்வுபெற்ற பூசாரிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை ரூ.1,000-ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.
ஓய்வூதியம் பெறுவதற்கான வருமான உச்சவரம்பு ரூ.24 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக உயர்த்தி நிர்ண யம் செய்யப்படுகிறது.
இதற்கென 2021-22 நிதியாண்டு முதல் ஓராண்டுக்கு தொடர் செலவினமாக செலவினத் தொகை ரூ.11.72 கோடி ஒதுக்கீடு செய்தும், நடப்பு நிதியாண்டில் 4 மாதங்களுக்கு மட்டும் தேவைப்படும் கூடுதல் தொகையான ரூ.3.13 கோடி நிதி ஒப்பளிப்பு செய்தும் உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.