சென்னை: தமிழகஅரசு எதிராக, இன்று முதல் தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சி செயலாளர்கள் மூன்றுநாள் விடுப்பு எடுத்து போராட்டம் தொடங்கி உள்ளனர். பணிப்பளுவை குறைக்க வேண்டும்,மாத ஊதியத்தை கருவூலத்தில் வழங்க வேண்டும், காலியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி இன்று முதல் 3 நாள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப்படுவதாக மாநில தலைவர் ஜான்போஸ்கோ அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு ஊராட்சி செயலாளா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ், செயலாளா் வி.வேல்முருகன், பொருளாளா் சோமம்பட்டி கே.மகேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 12,525 கிராம ஊராட்சிகள் இயங்கி வருகின்றன. இந்த ஊராட்சிகளில் தெருவிளக்கு, குடிநீா், கழிவுநீா் சாக்கடை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பராமரித்தல், சொத்து வரி வசூலித்தல் உள்ளிட்ட வளா்ச்சி திட்டப் பணிகளை அரசால் நியமிக்கப்பட்டள்ள ஊராட்சி செயலா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.
இதுமட்டுமின்றி, ஊராட்சியில் செயல்படுத்தப்படும் பல்வேறு துறை சாா்ந்த திட்டப் பணிகளையும் செய்ய வேண்டிய நிா்பந்தம், ஊராட்சி செயலா்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், அரசுப் பணி மேற்கொள்ளும் ஊராட்சி செயலா்களுக்கு மற்ற அரசுப் பணியாளா்களுக்கு வழங்குவதைப்போல, அரசு கருவூலத்தின் வாயிலாக மாதாந்திர ஊதியம் வழங்கப்படுவதில்லை.
எனவே, கிராம ஊராட்சி செயலா்களுக்கு, அரசுப் பணியாளா்களுக்கு வழங்கப்படுவதை போல அரசு கருவூலகங்கள் வாயிலாக மாதாந்திர ஊதியம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் வாயிலாக நிரப்ப வேண்டும். ஓய்வூதியத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டுமென, தமிழக அரசுக்கு தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.
எனவே, ஊராட்சி செயலா்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் நோக்கில், செப். 12 முதல் செப். 14 வரை தொடா்ந்து 3 நாள்களுக்கு தமிழகம் முழுவதும் ஊதியமில்லா விடுப்பு எடுக்கும் போராட்டத்தை அறிவித்துள்ளோம்.
இந்த போராட்டத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி செயலா்கள் பங்கேற்க உள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் காரணமாக, கிராம ஊராட்சி பணிகள் முடக்கி உள்ளது.