சென்னை: மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடத்துவது குறித்து அகில இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி பா.ஜனதாவில் இணைந்த விளவங்கோடு தொகுதி எம்எல்ஏவான விஜயதாரணி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல, திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பொன்முடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கியதால், அவரது மந்திரி பதவி மற்றும் எம்.எல்.ஏ. பதவி தானாகவே பறிபோகியுள்ளது. ஆனால், அந்த தொகுதி காலி என அறிவிக்கப்படாமல் இருக்கிறது. இதுவும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில், 100 சதவீதம் வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு பேரணியை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிராதா சாகு தொடங்கி வைத்தார். இதில் சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை போலீஷ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, மக்களவை தேர்தலையொட்டி, அனைத்து பணிகளும் முடிவடைந்து உள்ளன. தேர்தலை எதிர்கொள்ள தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாக கூறியவர், சென்னையில் மட்டும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட இரண்டு கம்பெனி துணை ராணுவத்தினர் வர இருப்பதாக தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து, செய்தியாளர்கள் விளவங்கோடு, திருக்கோவிலூர் தொகுதிகள் இடைத்தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சத்யபிரதா சாகு, “மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு இடைத்தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் முடிவு செய்யும். திருக்கோவி லூர் தொகுதியை காலியாக அறிவிப்பது குறித்து இதுவரை தகவல் இல்லை என்று கூறினார்.