விக்கிவாண்டி: இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதியில் இன்று காலை 8மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

விக்கிவாண்டி தொகுதியில் ஜூலை 10ந்தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து,  வாக்கு எண்ணிக்கையானது  இன்று (ஜுலை 13ந்தேதி) நடை பெற்று வருகிறது.

முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்படும். அதைத்தொடர்ந்து இவிஎம் இயந்திரங்கள் திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட உள்ளது.  வாக்கு எண்ணிக்கையானது, மொத்தம் 20 சுற்றுகள் எண்ணப்பட உள்ளது.

வாக்கு எண்ணிக்கைகாக, மொத்தம்  14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு மேஜைகள்  தபால் வாக்கு எண்ணிக்கைக்காக போடப்பட்டு உள்ளதாகவும்,  தபால் வாக்குகள் அனைத்தும் ஒரே சுற்றாக எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்தின் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் மையத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் கண்காணிப்பு மையம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணிக்கை மையம், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை முன் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, திமுக சார்பில்  அன்னியூர் அ.சிவா, பாமக சார்பில் வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் பொ.அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் களம் கண்டனர்.  இங்கு  82.48 சதவீத வாக்குப் பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் கூறியிருந்தது