விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இதுவரை 8 சுற்று முடிவடைந்துள்ள நிலையில், 8வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சிவா சுமார் 30ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
காலை 11.30 மணி நிலவரப்படி, திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். மொத்த 51,567 வாக்குகள் பெற்று சுமார் 30ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். . அதைத்தொடர்ந்து பாமக வேட்பாளர் 19,812 வாக்குகளும், நாம் தமிழர் – 4,187 வாக்குகள் பெற்றுள்ளனர்.
இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதியில் இன்று காலை 8மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. விக்கிவாண்டி தொகுதியில் ஜூலை 10ந்தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கையானது இன்று (ஜுலை 13ந்தேதி) நடை பெற்று வருகிறது.
முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதைத்தொடர்ந்து இவிஎம் இயந்திரங்கள் திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை யானது, மொத்தம் 20 சுற்றுகள் எண்ணப்பட உள்ளது. இதுவரை 8 சுற்றுக்கள் எண்ணப்பட்டு உள்ளது.
முன்னதாக, வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் முதலில் தபால் வாக்கை எண்ணும் பணி நடந்தது. அதில், முதல்வாக்கே கையெழுத்து இல்லாததால் செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டது. தபால் வாக்குகள் எண்ணிக்கையின் முடிவில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 130 வாக்குகளுடன் முன்னிலை பெற்றார். பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு 10 வாக்குகள் கிடைத்துள்ளன. நாம் தமிழர் வேட்பாளர் டாக்டர் அபிநயா 2 வாக்குகள் பெற்றார்.
விக்கிவாண்டி தொகுதியில், , திமுக சார்பில் அன்னியூர் அ.சிவா, பாமக சார்பில் வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் பொ.அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் களம் கண்டனர். இங்கு 82.48 சதவீத வாக்குப் பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.