சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அன்னியூர் சிவா திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 10ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்று, 14ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றார். அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் அன்புமணியை 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பாமக வேட்பாளர் அன்புமணி இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 10,602 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட்டை இழந்தார். திமுக வெற்றியை, திமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.
இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, சென்னை வருகை தந்தது, தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது அன்னியூர் சிவாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அமைச்சர்களும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியின்போது, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் பொன்முடி, கொள்கைப் பரப்பு செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்பி, அமைச்சர்கள் எ.வ.வேலு, சக்ரபாணி, தா.மோ.அன்பரசன், சிவசங்கர், ஆர்.காந்தி, செஞ்சி மஸ்தான், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆ.ராசா எம்பி, விழுப்புரம் மாவட்ட திமுக செயலாளர்கள், கௌதம் சிகாமணி, ப.சேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் க.பொன்முடி, விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் ஆகியோர் நினைவிடத்துக்கு சென்று வெற்றி சான்றிதழை வைத்து மரியாதை செலுத்தினர்.