கொரோனாவால் மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் எட்டு மாதங்களுக்கு பிறகு கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் திறக்கப்பட்ட போது, ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.

முதல் நாள் ரிலீசான படத்துக்கு வெற்றிகரமான 2- வது நாள் என பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கும். பரிதாப நிலைக்கு சினிமா உலகம் தள்ளப்பட்டது.

“தியேட்டர்களின் எதிர்காலம் முடிந்தது” என திரை உலகத்தினர் கன்னத்தில் கை வைத்து துக்கத்தில் ஆழ்ந்த போது, கடந்த 13 ஆம் தேதி வெளியான விஜயின் மாஸ்டர் படம், நிலைமையை தலைகீழாக மாற்றியது.

தென் இந்தியா முழுக்க மாஸ்டர் திரைப்படம் வெளியான தியேட்டர்களில் தீபாவளி கொண்டாட்டத்தை பார்க்க முடிந்தது. இதுவரை மாஸ்டர் 200 கோடி ரூபாய் உலக அளவில் வசூலித்துள்ளது.

இதன் பின்னர் வெளியான ‘கிராக்’ என்ற தெலுங்குப்படமும், வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ரவிதேஜா நடித்த இந்த படம் சில நாட்களில் 60 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

இந்தியில் பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாத நிலையில், மாஸ்டர் படமும், ‘கிராக்’ படமும் சினிமாவுக்கு நம்பிக்கை வெளிச்சத்தை பாய்ச்சி உள்ளது.

இந்தியில் ரிச்சா சத்தா நடித்த ‘மேடம் சீஃப் மினிஸ்டர்’ என்ற சினிமா அண்மையில் வெளிவந்தது. ஆனால் ‘பிளாப்’ ஆகி விட்டது. வசூலும் இல்லை. நல்ல விமர்சனமும் இல்லை.

இதற்கு முன்னர் ரிச்சா சத்தா நடித்து வெளியான ‘ஷகீலா’’ திரைப்படமும், வந்த வேகத்திலேயே தியேட்டரை விட்டு வெளியேறி விட்டது.

– பா. பாரதி