தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் (தேமுதிக) நிறுவனரும், நடிகருமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, டி.வி.கே. தலைவர் விஜய் உள்ளிட்ட அனைத்து மூத்த தலைவர்களுக்கும் இந்த நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த் நினைவு தினத்தை முன்னிட்டு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடம் வரை அமைதிப் பேரணி செல்ல தே.மு.தி.க. சார்பில் அனுமதி கேட்டாதாகவும் அதற்கு மாநகர காவல்துறை அனுமதி மறுத்ததாக விஜயகாந்தின் மைத்துனர் எல்,கே. சுதீஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தேமுதிக நிறுவனரும், தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி காலமானார்.
அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும் அவரது நினைவிடத்தில் குவிந்தனர்.
விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் பேரணியாக சென்ற தே.மு.தி.க. தொண்டர்கள் விஜயகாந்த் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மேலும், ட்ரோன் மூலம் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.