சென்னை:

நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறோம் என்பது குறித்து கேப்டன் விரைவில் அறிவிப்பார் என்று விஜயகாந்த் மனைவி பிரேமலதா கூறினார்.

விமான நிலையத்தில் சுமார் 8 மணி நேரம் தங்க வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் நண்பகலில் வீடு திரும்பினார். இது விஜயகாந்த் கட்சி தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், சிகிச்சை முடிந்து இன்று அதிகாலை 4 மணி அளவில் சென்னை திரும்பினார். ஆனால், அவர் உடனடியாக வீட்டுக்கு செல்லாமல் விமான நிலைய ஓய்வு அறையிலேயே தங்க வைக்கப்பட்டிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. நல்ல நேரம் பார்த்து விஜயகாந்த் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவார் என கூறப்பட்டது.

இதற்கிடையில் விஜயகாந்த்துக்கு விமான நிலைய மருத்துவர்கள் உடல்நிலை குறித்து பரிசோதனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியானது. சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக விமான நிலையத்தில் காத்திருந்த விஜயகாந்த் நண்பகல் 12.30 மணி அளவில்  வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த விஜயகாந்துக்கு தேமுதிக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த் மனைவி பிரேமலதா, அமெரிக்காவில் இருந்து நீண்ட பயணம் செய்ததால் விமான நிலையத்திலேயே அவர் ஓய்வு எடுத்தார் என்று கூறினார்.
மேலும், விஜயகாந்துக்கு ,சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது தற்போது அவர்  நலமாக இருக்கிறார் என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு,  இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வில்லை என்றவர்,  வேறு எந்தக்கட்சியும் கூட்டணி குறித்து அறிவிக்கவில்லை என்றும்,  தற்போது தான் விஜயகாந்த் சென்னை திரும்பியுள்ளார். விரைவில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று தெரிவித்தார்.

கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த பிறகு  விஜயகாந்த் என்ன மாதிரியான முடிவு எடுப்பார் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றும் பிரேமலதா தெரிவித்தார்.

ஆனால், தேமுதிக கட்சி அதிமுக பாஜக கூட்டணியில் ஐக்கியமாகி விட்டதாகவும், தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதுபோல விஜயகாந்த் உடல் தேறிவிட்டார் என்று பிரேமலதா கூறும் வார்த்தையையும் தேமுதிக தொண்டர்கள் நம்பவில்லை. விஜயகாந்த் பல மணி நேரம் விமான நிலையத்தில் காக்க வைக்கப் பட்டதும், அவருக்கு மருத்துவர்கள் சோதனை நடத்தியும், தேமுதிக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.