சென்னை:
வேலூர் பாராளுமன்ற தொகுதியில், அதிமுக கூட்டணி வேட்பாளரான ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்வார் என்று பிரேமலதா நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
நாடு முழுவதும் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற்றபோது, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா காரணமாக வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த தொகுதிக்கு ஆகஸ்டு 5ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, கடந்த 11ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தொடர்ந்து தேர்தல் பிரசாரங்களும் களைக்கட்டி வருகிறது.
இந்த நிலையில், கட்சி நிர்வாகி ஒருவரின் நிகழ்ச்சியில் பங்கேற்ற தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அ.தி.மு.க.வுடான கூட்டணி தொடரும். வேலூர் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யாமல் தேர்தலை ரத்து செய்தது நியாயம் அல்ல. தற்போது அதே வேட்பாளர் போட்டியிடுகிறார். பணப்பட்டுவாடா நடக்கிறது. தகுதி நீக்கம் செய்திருந்தால் இதற்கு தீர்வு வந்திருக்கும் என்றவர், உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தே.மு.தி.க. தயாராக இருப்பதாகவும் கூறினார்.
வேலூர் மக்களவை தொகுதியில் கூட்டணி கட்சி வேட்பாளரான ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்வார் என்று தெரிவித்தவர், கல்வி வியாபாரம் ஆகி வருகிறது என்று வருத்தம் தெரிவித்தவர், புதிய கல்வி கொள்கை என்பது மாணவர்களின் போக்கிற்கே விட வேண்டும் அதில் அரசியல் செய்யக்கூடாது என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.