சென்னை: மறைந்த விஜயகாந்தின் உடல் அவரது கட்சியின் தலைமையகமான கோயம்பேடு தேமுதிக அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று உடல்நிலை பாதிப்பால் உயிர் இழந்த நிலையில், இன்று மாலை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலக வளாகத்தில் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. இ்ந்த நிலையில் விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்ய நேற்று ஒரு இடம் மார்க் செய்யப்பட்டிருந்தது. அந்த இடம் மணிமண்டபம் கட்டுவதற்கு போதுமானதாக இல்லை என கூறப்பட்ட நிலையில், தற்போது அதற்கு அருகாமையில் வேறு இடம் தேர்வு செய்யப்பட்டு மார்க் செய்யப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளது. ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டும் பணி தொடங்கியுள்ளது.
மறைந்த விஜயகாந்த்தின் உடல் இன்று காலை 6மணி முதல் சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், மதியம் 1மணி அளவில் அங்கிருந்து இறுதி ஊர்வலம் தொடங்கி மாலை 4மணி அளவில் கோயம்பேடு வந்தடைகிறது. அதைத்தொடர்ந்து, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலக வளாகத்தில் மாலை 4.45மணிக்கு இறுதிச்சடங்கு அரசு மரியாதையுட;ன நடைபெற உள்ளது.
இதையொட்டி, அங்கு உடல் அடக்கம் செய்வதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த இறுதிச்சடங்கில் அவரது குடும்பத்தினர் உள்பட முக்கிய நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும், அதாவது இறுதி சடங்கில் 500 பேர் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள், ரசிகர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.