சென்னை:

திமுக, பாஜக கூட்டணியில் தேமுதிக இணையும் என எதிர்பார்த்த நிலையில், பிரமேலதாவின் கடுமையான  கெடுபிடி காரணமாக  கூட்டணி அமைவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், இன்று மோடி தலைமையில், தமிழக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட வண்டலூர் கிளாம்பாக்கம் பொதுக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த  விஜயகாந்த் கட்சியின் பேனர்கள், கொடிகள் இரவோடு இரவாக அகற்றப்பட்டன.

ஏற்கனவே கடந்த  2014ல் கடைசி நேரம் வரைக்கும் விஜயகாந்த் இழுத்தடித்தார். அதுபோலவே இந்த தடவையும் இழுத்தடித்து வருவதால் அதிமுக எரிச்சல் அடைந்துள்ளது. அதே வேளையில்,  திமுகவும் கூட்டணி கதவை மூடிவிட்ட நிலையில், தேமுதிகவின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.

இந்தநிலையில்,  மோடி பேசவிருக்கும் மேடைக்கு முன்பாக நேற்று கட்டப்பட்டு இருந்த தேமுதிக கொடிகள் இரவோடு இரவாக அகற்றப்பட்டன. விஜயகாந்த் படம் உள்பட பேனர்கள் கிழித்து எறியப்பட்டன.

நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து களத்தில் இறங்கியுள்ளன. இன்று மோடியின் தலைமை நடைபெற உள்ள கிளாம் பாக்கம் பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்,  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் . கிருஷ்ண சாமி,  புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், மத்திய அமைச்சர் பொன் . ராதாகிருஷ்ணன் பாஜக மாநில தலைவர் டாக்டர் . தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பிற்பகல் 3 .15 மணி அளவில் சென்னை வரும் மோடி ஹெலிகாப்டர் மூலம் கிளாம்பாக்கம் சென்று அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இந்த நிகழ்ச்சியின் போது இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் ரூபாய் 5,150 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள எண்ணூர் திரவ எரிவாயு முனையத்தை நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி அர்ப்பணிக்கிறார்.

இதுதவிர,  சென்னை அடையாறு எம்ஜிஆர் – ஜானகி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் சிலையையும் அவர் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், பொன் . ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

பின்னர் மாலை 4 மணிக்கு  கிளாம்பாக்கம் பொதுக்கூட்ட திடலுக்கு வந்து கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரதமர் மோடி பேசுகிறார். அதிமுக, பாமக, பாஜக தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் என்பதால் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன .

மோடி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.