சட்டசபையில் ஜெயலலிதா படம் திறப்பதற்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
குறிப்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
அவர், “வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்த ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரது உருவப்படத்தை தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகர் திறந்து வைப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். இந்த முயற்சியை கைவிட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
மேலும், “தமிழக சட்டமன்றத்தில் நடக்கவிருக்கிற ஜெயலலிதா உருவப்பட திறப்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க மாட்டார்கள்” என்றும் தெரிவித்தார்.
ஆனால் அதே கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வான விஜயதரணி, “ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறப்பது தவறல்ல” என்று தெரிவித்திருக்கிறார்.
இது அரசியல்களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா காலத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் சிலர் அவருக்கு அதிதீவிர விசுவாசிகளாக இருந்தார்கள். அவர்களை ஜெயா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் என்று கிண்டலாக சொல்வது உண்டு.
அதே போல இப்போது ஆளும் அதிமுகவுக்கு ஆதரவாக விஜயதரணி இருக்கிறாரோ என்ற யூகம் எழுந்திருக்கிறது. இதனால் அவரை எடப்பாடி காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்றும் சிலர் அழைக்கத் துவங்கியிருக்கிறார்கள்.
மேலும் அரசியல்வட்டாரத்தில், “ஆளும் அதிமுக அரசு பெரும்பான்மை இன்றிதான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தற்போது ஆளுங்கட்சியை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்களில் சிலர்கூட இக்கட்டான நேரத்தில் டி.டி.வி. தினகரன் பக்கம் சாயக்கூடும். இதையெல்லாம் எதிர்பார்த்துத்தான் மற்ற கட்சிகளில் உள்ள எம்.எல்.ஏக்களை வளைக்க முதல்வர் எடப்பாடி திட்டம் தீட்டி வருகிறார். அந்த வகையில் விஜயதரணி, ஆளுங்கட்சிக்கு ஆதரவாளராக மாறிவிட்டார் போலும்” என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.