சென்னை:
நுழைவு வரி விவகாரத்தில் நடிகர் விஜய் மேல்முறையீடு செய்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்த 2012-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காருக்கு தமிழக அரசு விதிக்கும் நுழைவு வரியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், வழக்கை தள்ளுபடி செய்து, நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அந்த தொகையை முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். நடிகர்கள் முறையாக சரியான நேரத்தில் வரி செலுத்தி உண்மையான நாயகர்களாக இருக்க வேண்டும் என தீர்ப்பில் கூறியிருந்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், நடிகர் விஜய் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு நுழைவு வரி விலக்கு அளிக்க கோரி பல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் விலக்கு கோரியதாகவும், இந்தியாவுக்குள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு மதிப்புக் கூட்டப்பட்ட வரி செலுத்தாமல் காரை கொண்டு செல்லவே நுழைவு வரி விதிக்கப்படுகிறது.
எனவே வரி விலக்கு கோரியதாக கூறப்பட்டுள்ளது.இந்த மனு, வரும் திங்கட்கிழமையன்று விசாரணைக்கு வரவுள்ளது.