விஜய்யின் ‘பிகில்’ படம் ரூ.300 கோடி வருமானம் ஈட்டியதாக செய்திகள் பரவின. இதைத் தொடர்ந்து வருமானவரித் துறை யினர், ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான திரையரங்குகள், அலுவலகங்கள், வீடுகள், நடிகர் விஜய்யின் பண்ணை வீடு, நீலாங்கரை மற்றும் சாலிகிராமம் வீடுகள், சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் சென்னை மற்றும் மதுரை வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் சோதனை நடத்தினர்.

அன்புச்செழியன் வீட்டில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணப்பரிவர்த்தனை ஆதாரங்கள், சொத்து மதிப்புகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக, நேரில் ஆஜராகும்படி நடிகர் விஜய் உட்பட 3 பேருக்கும் வருமானவரித் துறை சம்மன் அனுப்பியது.

நுங்கம்பாக்கம் வருமானவரித் துறை புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் விஜய் ஆஜராகிறார் என்ற தகவல் பரவியுள்ளதால் அவர் ரசிகர்கள் அங்கு வந்துள்ளனர் .

வருமான வரி (ஐ-டி) துறை வெளியிட்ட சம்மனைத் தொடர்ந்து, நடிகர் விஜய் இன்று தணிக்கையாளர்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனைகளை நடத்தியதாக கூறப்படுகிறது.

அவரது ஆடிட்டர் இன்று பிற்பகுதியில் நுங்கம்பாக்கம் வருமான வரி அலுவலகத்தில் ஐ-டி அதிகாரிகளை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.