கரூர்: த.வெ.க. தலைவர் விஜய் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. இந்த சோக சம்பவத்துக்கு  குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி, ஆளுநர் ரவி, காங்கிரஸ் தலைவர் கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி,  தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

தவெக தலைவர் விஜ்ய் இன்று நாமக்கல் கரூர் மாவட்டத்தில்  சுற்றுப்பயணம்  மேற்கொண்டார். அவர் இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டார். அதன்படி இன்று கரூர்-ஈரோடு சாலை வேலுச்சாமிபுரத்தில் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் மாவட்ட போலீஸ் தரப்பில் பல்வேறு நிபந்தனைகளுடன் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், அவர் சென்னை திரும்ப, திருச்சி செல்ல முயன்றார். அப்போது, திடீரென கரூர் வேலுச்சாமிபுரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டத்தில் பலர் மயங்கி விழுந்தனர். இதில் பெண்களும் சிறுவர்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதையை தகவலின்படி 36 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மயக்கமடைந்தவர்களை உடனடியாக ஆம்புலன்சில் அழைத்து சென்று கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரூரில் உள்ள அனைத்து ஆம்புலன்ஸ் வாகனங்களும், மயக்கமுற்ற நபர்களை ஏற்றிச் செல்வதற்காக வேலுச்சாமிபுரத்திற்கு வந்தவண்ணம் உள்ளன. மேலும் திருச்சியில் இருந்து மருத்துவக்குழுவினர் கரூர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

விஜய் பிரச்சார கூட்டத்தில் இருந்து தொடர்ந்து மருத்துவமனைகளை நோக்கி ஆம்புலன்ஸ்கள் வந்தக்கொண்டே இருக்கின்றனர். உறவினர்களும் மருத்துவமனைக்கு வரத்தொடங்கியுள்ளனர். இதனால் கரூரே மரண ஓலமாக காட்சிஅளிக்கிறது. வீட்டில் சொல்லாமல் கூட்டத்திற்கு பலர் வந்திருக்கும் நிலையில் உறவினர்கள் அவர்களை தேடி மருத்துவமனை வருகின்றனர்.  மருத்துவமனை முழுவதும் திரும்பும் திசையெல்லாம் ஆம்புலன்ஸ்கள் வந்துக்கொண்டிருக்கின்றனர். மேலும் மருத்துவமனை முழுவது மக்கள் அழுகுரல் கேட்கிறது.

கரூரில் இருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு ஸ்டாலின் கேட்டுக்கொண்டு உள்ளார்.  இதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் உடனே கருர் விரைய உள்ளதாக தகவ்லகள் தெரிவிக்கின்றன. கரூர் அருகே உள்ள மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அமைச்சர் அன்பில் மகேஸ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

‘குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 

விஜய் பிரசார கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். ”தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.” என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி 

‘”தமிழகத்தின் கரூரில் நடந்த அரசியல் பேரணியின் போது நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு வலிமை கிடைக்க வாழ்த்துகிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.” என மோடி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா, இத்துயரத்தை தாங்கும் வலிமையையும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் இறைவனை பிராத்திக்கிறேன் என குறிப்பிட்டு உள்ளார்.

ராஜ்நாத் சிங் கரூரில் நேரிட்ட கோர விபத்து உயிரிழப்பு சம்பவத்தால் மிகுந்த வருத்தமடைந்தேன். நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆழந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி “கரூரில் நடந்த அரசியல் பேரணி கூட்டத்தில் குழந்தைகள் உள்பட அப்பாவி உயிர்கள் பறிபோனது மிகுந்த வலியையும் வேதனையையும் அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன்.” என ஆளுநர் ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே  தமிழகத்தின் கரூரில் நடந்த அரசியல் பேரணியில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மற்றும் துயரமான கூட்ட நெரிசலில் சிக்கி பல அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவர்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கவும், நிவாரணம் மற்றும் உடனடி மருத்துவ உதவிகளில் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றவும் அனைத்து காங்கிரஸ் தொண்டர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்” காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள செய்தியில், கரூரில் நடந்த துயரச் சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்த அனைவரும் விரைவில குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்க காங்கிரஸ் தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

பிரியங்கா காந்தி : தமிழக மாநிலம் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் மனம் உடைந்து போனேன். கற்பனை செய்ய முடியாத இந்த சோகத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருடன் எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் அவர்கள் வலிமை பெறட்டும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். காயமடைந்தவர்களுக்கு உடனடியாக உதவவும், நிவாரண நடவடிக்கைகளில் குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகளுக்கு ஆதரவளிக்கவும் பிராந்தியத்தில் உள்ள அனைத்து காங்கிரஸ் தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன் என பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ளார்.

தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,  இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,  “கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் பேசுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29 க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்ததாகவும், மற்றும் பலர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை நேரடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்கே அனுமதிக்கப்பட்டாருக்கான உதவிகளை வழங்க பணித்துள்ளேன். மேலும், எனது அறிவுறுத்தலின்படி, மருத்துவமனை உள்ள பகுதியில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் அதிமுக தொண்டர்கள் மனிதச் சங்கிலி அமைத்து, சிகிச்சை பெறுவோருக்கான உரிய உதவிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக தமிழக அரசு மேற்க்கொள்ளவும், உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  த.வெ.க. பிரசாரத்தில் ஏற்பட்ட துயரத்திற்கு காவல்துறையின் குளறுபடிகள்தான் காரணம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கரூரில் நடிகர் விஜய் பிரச்சாரத்தில் நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு அதிர்ச்சியளிக்கிறது: உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும்! கரூர் நகரில் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் அவர்கள் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி 31 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. பரப்புரைக்கான ஏற்பாடுகளை செய்வதிலும், கூட்டத்தை காவல்துறையினர் ஒழுங்குபடுத்துவதிலும் செய்த குளறுபடிகள் தான் இதற்கு காரணமாகும். கரூர் நெரிசல் மற்றும் உயிரிழப்புக்கான காரணங்கள் குறித்து உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும்; இனியும் இத்தகைய விபத்துகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெரிசலில் சிக்கி உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும்; காயமடைந்த அனைவரும் விரைந்து உடல் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலை  கரூரில், தவெக தலைவர் திரு. விஜய் அவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், கூட்ட நெரிசலில், குழந்தைகள் உட்பட சுமார் நாற்பது பேர் உயிரிழந்திருப்பதாக வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் உரியச் சிகிச்சை அளிக்க வேண்டுமென்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு, எத்தனை பேர் வருவார்கள் என்பதை முறையாகக் கணக்கிட்டு, அதற்கேற்ப இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதும், கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் பாதுகாப்புக்குத் தேவையான அளவு காவல்துறையினரை பணியமர்த்துவதும் காவல்துறையின் பொறுப்பு. திரு. விஜய் அவர்கள் கூட்டத்தில், மின்சாரம் தடை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன.

இத்தனை கவனக்குறைவாகத் தமிழக அரசும், காவல்துறையும் செயல்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. திமுகவினர் நடத்தும் கூட்டங்களுக்கு, அந்த மாவட்டத்தின் மொத்த காவல்துறையினரையும் அனுப்பிப் பாதுகாப்பு கொடுக்கும் திமுக அரசு, எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமலிருப்பது வழக்கமாகியிருக்கிறது. உடனடியாக, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் இந்த விபத்து நடந்ததா என்பது குறித்தும், மின்சாரம் தடைப்பட்டது குறித்தும் முழு விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

ரஜினிகாந்த்  கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கு மிகவும் வேதனையளிக்கிறது என்று ரஜினி தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள், காயமடைந்தோருக்கு ஆறுதல்களையும் ரஜினி தெரிவித்துள்ளார். கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது.உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

முன்னாள் அமைச்சர் விஜய்பாஸ்கர் ”கரூரில் இருந்து வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றது. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் காட்சிகள் கண்களை கலங்கச் செய்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவர்கள் குழு கொண்டு உடனடியாக உயரிய சிகிச்சைகளை வழங்கிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். பரிதாபமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கனத்த இதயத்துடன் கண்ணீர் அஞ்சலி!” என்று எக்ஸ் பக்கத்தில் முன்னாள் அமைச்சர் விஜய்பாஸ்கர் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

கமல்  நெஞ்சு பதைக்கிறது. கரூரிலிருந்து வரும் செய்திகள் பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கவும் வார்த்தைகளின்றித் திகைக்கிறேன். நெரிசலிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என்று கமல் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரமுகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.