சென்னை: நடிகர் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில், விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அரசியல் கட்சியை பதிவு செய்ய விண்ணப்பம் செய்துள்ள நிலையில், நடிகர் தனது ரசிகர் மன்றங்களைச் சேர்ந்த 50 மாவட்ட நிர்வாகிகளுடன் தனது பனையூர் பண்ணை வீட்டில் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் தனது ரசிகர்களைக் கொண்டு, ரசிகர் மன்றங்களை “அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம்” என்ற பெயரில் மாற்றி பல சமூக பணிகளை செய்து வருகிறார் . இதனால் அவரது ரசிகர்கள் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அதற்கேற்றால் போல அவரும், மாநில மத்திய அரசுகளை எதிர்த்து, திரைப்படங்களில் பஞ்ச் டயலாக் பேசி ரசிகர்களே உசுப்பேத்தி வந்தார்.
இந்த நிலையில், கடந்த வாரம், நடிகர் விஜய் தந்தையும் , இயக்குநருமான எஸ்ஏ சந்திரசேகர் தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாகவும் , அதறகாக தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம் செய்துள்ளதாகவும் கூறினார். அதனை கேள்விப்பட்ட விஜய் அந்த கட்சிக்கும் , தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியதுடன் , தனது பெயரோ அல்லது புகைப்படமோ அந்த கட்சிக்காக பயன்படுத்தினால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது தந்தைக்கு எதிராக எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் , தந்தை மற்றும் மகன் இடையே உள்ள மோதலும் பெரிதாக பேசப்பட்டது.
இந்த நிலையில் விஜய் இன்று சென்னையில் உள்ள பனையூர் இல்லத்தில் வைத்து தனது மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தில் மொத்தமாக 200 மாவட்ட நிர்வாகிகள் உள்ள நிலையில் திருச்சி ,கரூர் , பெரும்பலூர் உள்ளிட்ட 30 மாவட்டங்களில் உள்ள 50 மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பும் நடிகர் விஜய் இதுபோல தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.