ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலின்போது விசுவாசமாக பணியாற்றிய நகராட்சி ஆணையர் சிவகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி ரெய்டில், முக்கிய ஆவணங்கள் உள்பட எராளமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளனது. இதனால் சிவகுமார் சஸ்பெண்டு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், ஈரோடு மாவட்டம் பெரியார் நகரில் வசித்து வருகிறார். இவர் பல்லாவரம் நகராட்சியாக இருந்தபோது, அங்கு ஆணையாளராக  பணியாற்றிய போது  ஏராளமான முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது ஈரோடில் பணியாற்றி வரும் இவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின்போது ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும், விசுவாசமாகவும் பணியாற்றி வந்தார்.

ஏராளமான தேர்தல் தொடர்பான புகார்கள் கூறப்பட்டபோதும், அதை கண்டுகொள்ளாமல், இருந்து வந்த சிவகுமார்மீது, தற்போது லஞ்சு ஒழிப்பு காவல்துறை அதிரடியாக நடவடிக்கை எடுத்த உள்ளது.

நேற்று (21ந்தேதி) திடீரென அவரது வீட்டுக்கு வந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர்,  ஈரோட்டில் உள்ள அவரது இல்லத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சுமார் 9 மணி நேரமாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் ஆணையர் சிவக்குமார் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத பொருட்கள் பணம்  கைப்பற்றப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நகராட்சி ஆணையாளர் பணியிட மாற்றத்துக்கு ரூ.50லட்சம் முதல் ரூ.1 கோடி வரை லஞ்ச பேரம் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், வளம் மிக்க ஈரோட்டுக்கு நகராட்சி ஆணையாளராக வர சிவகுமார் பணி மாறுதல் பெற பல லட்சம் லஞ்சம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.