கோவை: கோவை பீளமேடு நவ இந்தியாவில் உள்ள கே.சி.பி நிறுவனத்தின் அடுக்கு மாடி கட்டிடத்தில் இன்று  2-வது நாளாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை தொடர்ந்து வருகிறது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக ஆட்சியின்போது ஊழல்செய்து கோடிக்கணக்கில் கொள்ளையடித்ததாக, திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதிய லஞ்ச ஒழிப்புதுறையில் கடந்த 9ந்தேதி புகார் கொடுத்தார். அதையடுத்து 9ந்தேதி புகாரின்மீது எஃப் ஐஆர் போடப்பட்டு, 10ந்தேதி அன்றே (நேற்று) லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனகர். எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது உறவினர்கள் வீடு உள்பட 60 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன,

இந்த நிலையில், பீளமேடு நவ இந்தியாவில் 9 மாடி கொண்ட தனியார் கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் உள்ள 1, 3, 7 மற்றும் 9-வது தளத்தில் கே.சி.பி நிறுவன அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்திலும் நேற்று சோதனை நடந்தது.  இதன் நிர்வாக இயக்குனராக சந்திரபிரகாஷ் உள்ளார். இங்குள்ள 1, 3வது தளங்களில் நேறறு சோதனை நடத்தப்பட்டது. அதையடுத்து, இன்று  7-வது மற்றும் 9-வது தளத்தில் இன்று காலை 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.

லஞ்ச ஒழிப்பு கூடுதல் டி.எஸ்.பி. திவ்யா தலைமையிலான  லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக நேற்று  கே.சி.பி.நிர்வாக இயக்குனர் வீட்டில் சோதனை நடந்தபோது, அந்நிறுவன உரிமையாளர் சந்திர பிரகாஷ் வீட்டில் இருந்தார். சோதனையை கண்ட அவர் அதிர்ச்சியடைந்து, நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறினார். இதையடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.