‘குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்வதும மட்டுமே போக்சோ மற்றும் ஐடி சட்டத்தின் கீழ் குற்றமாகும்’ என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இதுகுறித்த வழக்கு தலைமை நீதிபதி (CJI) DY சந்திரசூட், நீதிபதி JB பர்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
சிறுவர் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது மட்டுமே போக்சோ சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் மற்றபடி அதை பதிவிறக்கம் செய்யாமல் பார்ப்பது அந்த சட்டத்தின் கீழ் குற்றமாகாது என்று கூறிய சென்னை நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மொபைல் போனில் சிறுவர் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 28 வயது நபர் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து கடந்த ஜனவரி 11ம் தேதி தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து ஃபரிதாபாத்தைச் சேர்ந்த ஜஸ்ட் ரைட்ஸ் ஃபார் சில்ட்ரன் அலையன்ஸ் மற்றும் புது தில்லியைச் சேர்ந்த பச்பன் பச்சாவ் அந்தோலன் ஆகிய இரண்டு அரசு சாரா அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எச்.எஸ்.பூல்கா உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது என்று வாதாடினார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், குழந்தைகள் ஆபாச படங்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சேமித்து வைப்பது மட்டுமன்றி அதைப் பார்ப்பதும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்று கூறியது.
இது மட்டுமின்றி, போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான சட்டத்தை நாடாளுமன்றம் கொண்டு வர வேண்டும் என உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது. இதில் ‘குழந்தை ஆபாசம்’ என்ற வார்த்தையை ‘குழந்தை பாலியல் சுரண்டல்’ என்று மாற்ற வேண்டும் என்று பரிந்துரைத்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான கிரிமினல் வழக்கை மீண்டும் தொடங்கிய உச்ச நீதிமன்றம், சிறுவர் ஆபாசப் படங்களைப் பகிர்வது, பார்ப்பது, உருவாக்குவது மற்றும் பதிவிறக்கம் செய்வது தண்டனைக்குரிய குற்றங்கள் என்று தெளிவாகக் கூறியதுடன் சென்னை உயர்நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.