டில்லி:

திமுக, அமமுக இணைய வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை  அமைச்சர் அத்வாலே தெரிவித்து உள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடுகள் குறித்தும்  அரசியல் கட்சிகள் தீவிரமாக பேசி வருகின்றன.

இந்த நிலையில், கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த  பாஜக ஆதரவு கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்  ராம்தாஸ் அத்வாலே, செய்தியாளர்களிடம் பேசும் போது, தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு பாஜகவுடன் அமமுக கூட்டணி அமைத்தால், அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் தினகரனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விருப்பப்படி நாடாளுமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைய அதிமுக மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் இணைந்து  பாஜகவுடன் கூட்டணி சேரவேண்டும் எனவும் ராம்தாஸ் அத்வாலே கூறியிருந்தார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அத்வாலே கருத்து குறித்து அதிமுக, அமுமக இரண்டு கட்சிகளும் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்திருந்தன.

இந்த நிலையில், அதிமுக, அமுமக இணைய வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம் என்று கூறியுள்ள அத்வாலே இதுகுறித்து தான், பாஜகவிடம் பேசவில்லை என்று தெரிவித்து உள்ளார்.

அதிமுகவின் இரு தலைவர்களும்  ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் எனவேதான் இரு தரப்பும் இணைந்தால் வலுவான கட்சியாக இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.

தற்போதைய நிலையில்,  பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து  தெலுங்கு தேசம் கட்சியும், ராஷ்ட்ரிய லோக்சபா கட்சி  வெளியேறிய நிலையில், அதிமுக இணைந்து வந்தால், அது தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தும் என்று விரும்பியே தான் அதிமுக இணைய வேண்டும் என்றும் கூறியதாக தெரிவித்து உள்ளார்.

மேலும், தனது கருத்து தமிழ்நாட்டின் நலனுக்காக என்று கூறிய அத்வாலே, அதை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது அவர்களுக்கு தெரியும் என்றும் கூறினார்.