புதுடெல்லி: உலகின் மூன்றாவது பெரிய அரிசி ஏற்றுமதியாளரான வியட்நாம், பல பத்தாண்டுகள் கழித்து, முதன்முறையாக இந்தியாவிடம் இருந்து அரிசி வாங்க துவங்கியுள்ளது.
உலக அரிசி வணிகத்தில், இந்தியாவின் போட்டியாளராக இருந்த வியட்நாம், உள்நாட்டில் கையிருப்பை மீறி தேவை அதிகமான காரணத்தாலும், கடுமையான விலையேற்றத்தாலும் இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வியட்நாம் மட்டுமல்லாது, அரிசி ஏற்றுமதியில் மற்றொரு முக்கிய நாடான தாய்லாந்தும்கூட, இந்தியாவிடமிருந்து அரிசி வாங்கும் முடிவை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், இந்திய அரிசி வணிகர்கள், இந்தாண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரியில், 70000 டன்கள் முற்றிலும் உடைந்த அரிசியை ஏற்றுமதி செய்யும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கப்பல் போக்குவரத்தில், ஒரு டன்னுக்கு 310 அமெரிக்க டாலர்கள் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“முதன்முறையாக, வியட்நாமிற்கு நாங்கள் அரிசியை ஏற்றுமதி செய்கிறோம். இந்திய அரிசி விலைகள் பலரும் விரும்பக்கூடியதாக உள்ளன. பெரியளவிலான விலை வித்தியாசங்கள், வேண்டுவோரை நம்மை நாடி வரவைத்துள்ளன” என்றுள்ளார் இந்திய அரிசி ஏற்றுமதியாளர் சங்க தலைவர் கிருஷ்ண ராவ்.