ஹனோய்
நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக 30 வயதில் திருமணம் மற்றும் 35 வயதில் இரு குழந்தைகள் என வியட்நாம் இளைஞர்களுக்க அர்சு திட்டம் தீட்டி உள்ளது.
அமெரிக்காவுடன் நடந்த போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வியட்நாம் தற்போது சிறிது சிறிதாக முன்னுக்கு வந்துள்ளது. இந்நாட்டில் தற்போது 9.6 கோடி மக்கள் உள்ளனர். இந்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் கடந்த 1980களில் இருந்து குறைந்து வருகிறது. ஒரு பெண்ணின் மகப்பேறு சராசரியாக 4 குழந்தைகளாக அப்போது இருந்தது தற்போது 2.09 ஆகக் குறைந்துள்ளது. மேலும் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று விடுவதால் மக்கள் தொகை கடுமையாகக் குறைந்துள்ளது.
நகர்ப்புறங்களில் ஒரு பெண்ணின் சராசரி மகப்பேறு 1.83 குழந்தையாகவும் கிராமப்புறங்களில் 2.26 ஆகவும் உள்ளது. ஒரு சில நகரங்களில் மகப்பேறு சதவிகிதம் மேலும் குறைந்துள்ளது. வியட்நாமின் மிகப்பெரிய நகரமான ஹொசிமின் நகரில் மகப்பேறு விகிதம் 1.39 ஆக உள்ளது. எனவே வியட்நாமில் தற்போது இளைஞர்கள் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது. வரும் காலத்தில் அது மேலும் குறையலாம் என எதிர்பார்ப்பு உள்ளது.
மேலும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் உழைப்பவர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பல பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. எனவே உற்பத்தி குறைவு ஏற்பட்டு கடும் பொருளாதார சரிவை விய்ட்நாம் சந்தித்து வருகிறது. மேலும் தற்போதுள்ள பெண்களை விடக் குழந்தைகள் குறைந்த அளவில் பள்ளிக் கல்வி பெறுகின்றனர். குறைந்த அளவே உள்ள படித்த இளைஞர்கள் வெளி நாடுகளுக்குச் சென்று விடுகின்றனர்.
எனவே வியட்நாம் அரசு ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் உள்ள இளைஞர்கள் 30 வயதுக்குள் மணம் முடித்து 35 வயதுக்குள் இரு குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்பதே அந்த திட்டமாகும். நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த உழைக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறு இரு குழந்தைகள் உள்ள தம்பதிகளுக்கு அரசு பல சலுகைகள் அளித்துள்ளன. வீடுகள் வாங்க, வாடகைக்குப் பெற, கல்விக் கட்டண சலுகைகள், பள்ளி சேர்க்கை, ஆகியவற்றில் முன்னுரிமை வழங்கப்பட உள்ளன. அத்துடன் இரு குழந்தைகள் பெற்ற பெண்ணுக்கு வருமான வரிச் சலுகைகள், அதிகப்படியான மகப்பேறு விடுமுறை உள்ளிட்ட பல சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்துக்கு வியட்நாம் நாட்டின் இளைஞர்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நிகுயென் சோங் என்னும் இளைஞர் வயதான பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குப் பார்வை குறைபாடு உள்ளிட்ட பல பிரச்சினைகள் உள்ளதாகவும் அதைச் சிறுவயது மகப்பேறு மூலம் தவிர்க்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார். பொதுவாகவே சீக்கிரம் மணம் புரிபவர்கள் குடும்ப நலனில் அக்கறை செலுத்துவது மேலும் நல்லொழுக்கத்துடன் வாழ்வதில் ஆர்வம் செலுத்துவதாக ஒரு பெண் தெரிவித்துள்ளார்.