பெங்களூரு
பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வெளியே சென்ற சசிகலா, மற்றும் இளவரசி சிறையின் உள்ளே வரும் வீடியோவை ரூபா அளித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, மற்றும் இளவரசி பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். சிறையை சோதனை இட்ட பெண் அதிகாரி சசிகலாவுக்கு பல தனிப்பட்ட சலுகைகள் அளிக்கப்படுவதாகவும், அதற்காக பல கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாகவும் புகார் எழுப்பினார். இதை தொடர்ந்து அவர் இட மாற்றம் செய்யப்பட்டார்,
இது குறித்து ஒரு வீடியோ பதிவு தற்போது ரூபாவால் லஞ்ச ஒழிப்புதுறையிடம் தரப்பட்டுள்ளது. அதில் சாதாரண உடை அணிந்த சசிகலாவும், இளவரசியும் கையில் ஆளுக்கு ஒரு பையை எடுத்துக்கொண்டு பிரதான நுழைவாயில் வழியாக ஆண் காவலர்கள் முன்னிலையில் நுழையும் காட்சி பதிவாகி உள்ளது. இதன் மூலம் சசிகலாவும் இளவரசியும் மூத்த அதிகாரிகளின் அனுமதியுடன் வெளியே சென்று வந்தது தெரிய வந்துள்ளது.
இது குறித்து ரூபா தெரிவிக்கையில், “நான் சசிகலாவும், இளவரசியும் சாதாரண உடையில் சிறையின் உள்ளே நுழையும் வீடியோவை சாட்சியமாக அளித்துள்ளேன். ஆண் காவலர்கள் முன்னிலையில் சர்வ சாதாரணமாக அவர்கள் சிறையில் நுழைவது பதிவாகி உள்ளது. ஆண் காவலர்கள் பிரதான நுழை வாயிலில் பணி புரிவார்கள். பெண்கள் சிறையின் உள் அவர்களுக்கு அனுமதி கிடையாது. அந்த ஆண் காவலர்களை இருவரும் எங்கு எப்போது வெளியே சென்றனர் என்பதையும், அவர்கள் வெளியே செல்ல அனுமதி அளித்தது யார் என்பதையும் விசாரித்தால் உண்மை வெளியே வரும்.
அது மட்டுமின்றி சசிகலா பார்வையாளர்களை சந்திக்க தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்ற கைதிகள் பார்வையாளர்களை சந்திக்க் ஒரு ஹால் உண்டு. கம்பி ஜன்னலுக்கு உள்ளே கைதிகளும், வெளியே பார்வையாளர்களுமாக தான் பேச முடியும். ஆனால் சசிகலா தன் பார்வையாளர்களுடன் அருகில் அமர்ந்து பேச முடியும். மற்ற கைதிகள் பார்வையாளர்களை சந்திக்கும் இடத்தில் உள்ளது போல் இங்கு சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்படவில்லை. இதனால் சசிகலாவை இதுவரை சந்தித்த பார்வையாளர்கள் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்” என கூறியுள்ளார்.