டெல்லி: இந்தியாவின் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை அகில இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி ஆகஸ்டு 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் கமிஷனர் அனுப் சந்திர பாண்டே ஆகியோர் கூட்டத்தில் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அட்டவணை இறுதி செய்யப்பட்டது. அது இன்று வெளியிடப்பட்டது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 25ம் தேதி முடிவடைவதை அடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து துணை ஜனாதிபதிக்கான தேர்தல் தேதியையும் அகில இந்திய தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ளார்.
தற்போது துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்டு 10ந்தேதியுடன் முடிவடைகிறது. பதவிக்காலம் முடிவுக்கு வருவதற்கு, 60 நாட்கள் முன்னதாக தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும் என்பது மரபு. அதன்படி துணைகுடியரசு தலைவருக்கான தேர்தலை அகில இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உளளது.இந்நிலையில், துணை ஜனாதிபதிக்கான தேர்தல் ஆகஸ்டு 6ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஜூலை 5ந்தேதி வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 19ந்தேதி
வேட்புமனு மீதான பரிசீலனை ஜூலை 20ந்தேதி நடக்கிறது. வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி தேதி ஜூலை 22ம் தேதி.
வாக்கு எண்ணிக்கை ஆகஸ்டு 6ந்தேதி. அன்று காலை 10மணி முதல் மலை 5மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கை நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
துணைஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை, இரு அவைகளான லோக்சபா மற்றும் ராஜ்யசபாவின் அனைத்து எம்.பி.க்கள் தங்களது வாக்குகளை செலுத்தி தேர்ந்தெடுக்கப்படுவார்.
தற்போதைய நிலையில், லோக்சபாவில் உள்ள மொத்தமுள்ள 543 தேர்ந்தெடுக்கபபட்ட எம்.பிக்கள் மற்றும் 2 நியமன எம்.பி.க்களும், ராஜ்யசபாவில், 233 தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களும், நியமன எம்.பி.,க்கள் 12 பேரும் உள்ளனர். இரு சபைகளின் எம்.பி.,க்கள் எண்ணிக்கை 790 ஆக உள்ளது. இவர்களே வாக்களிக்க தகுதி வாய்ந்தவர்கள்.
லோக்சபாவில் பா.ஜ.வுக்கு 303 எம்.பி.க்களும், ராஜ்யசபாவில் 92 எம்.பி., க்களும் சேர்த்து மொத்தம், 395 எம்.பி.,க்கள் உள்ளனர். கூட்டணி கட்சிகளையும் சேர்த்தால், பா.ஜ.,வின் பலம் 430க்கு மேல் உயரும். ஆனால், காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த பலம் 360 ஆக உள்ளது.
ஆதலால், துணைஜனாதிபதி தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரே வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.