டெல்லி: தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு அஞ்சல் தலையை துணைகுடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.

 டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில், 7ஆம்-9ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தை ஆண்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் II-ன் நினைவாக வெளியிடப்பட்ட அஞ்சல் தலையை துணைகுடியரசு தலைவர் வெளியிட்டு, தமிழ் கலாச்சாரத்துக்கு அரசு அளிக்கும் அங்கீகாரத்தைப் பாராட்டினார்.

 டெல்லியில் உள்ள துணை குடியரசுத் தலைவர் மாளிகையில் (Vice-President’s Enclave) டிசம்பர் 14 வெளியிட்டார். இந்த நிகழ்வில் பேசிய துணை குடியரசுத் தலைவர், தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழிக்கு இந்திய அரசு, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதைப் பாராட்டினார்.

‘காசி தமிழ் சங்கமம்’ போன்ற முன்முயற்சிகளையும், அத்துடன் கடந்த காலத்தில் உரிய அங்கீகாரம் பெறாத தமிழ் மன்னர்கள், தலைவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களை அங்கீகரித்து கௌரவிப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளையும் அவர் வெகுவாகப் பாராட்டினார்.‘ பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு அஞ்சல் தலை வெளியிட்டது, இந்த அங்கீகாரச் செயல்பாட்டின் ஒரு பகுதியே என்று துணை குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் வரலாற்று முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், பண்டைய தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர் என்றும், இவர் 7ஆம் நூற்றாண்டுக்கும் 9ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மத்திய தமிழ்நாட்டின் பகுதிகளை ஆண்ட புகழ்பெற்ற முத்தரையர் வம்சத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறினார்.

திருச்சிராப்பள்ளியைத் தலைநகராகக் கொண்டு ஏறக்குறைய நான்கு தசாப்தங்களாக ஆட்சி செய்த பேரரசர் முத்தரையரின் ஆட்சிக் காலம், நிர்வாக ஸ்திரத்தன்மை, நிலப்பரப்பு விரிவாக்கம், கலாச்சார ஆதரவு மற்றும் இராணுவ வலிமை ஆகியவற்றால் குறிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழ்நாட்டின் பல இடங்களில் காணப்படும் கல்வெட்டுகள், கோவிலுக்கு அளித்த கொடைகள், நீர்ப்பாசனப் பணிகள் மற்றும் தமிழ் இலக்கியத்திற்கு அவர் அளித்த பங்களிப்புகளுக்குச் சான்றாக உள்ளன என்றும், அவரது ஆட்சி தென் இந்திய வரலாற்றில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது என்றும் துணை குடியரசுத் தலைவர் எடுத்துரைத்தார்.

பிரதமரின் ‘விக்சித் பாரத் 2047’ (வளர்ந்த இந்தியா 2047) தொலைநோக்குப் பார்வையைச் சுட்டிக்காட்டிய துணை குடியரசுத் தலைவர், இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தையும், சிறந்த தலைவர்களின் மரபையும் ஆவணப்படுத்துவதும், கௌரவிப்பதும், பாதுகாப்பதும் ஒரு தேசிய முன்னுரிமை என்று வலியுறுத்தினார்.

‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ கொண்டாட்டத்தின் போது, தமிழ்நாட்டை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வந்த சுதந்திரப் போராட்ட வீரர்களையும், சிறந்த ஆட்சியாளர்களையும் கௌரவிக்க அரசு எடுத்த முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார். மேலும், இந்தியாவின் இழந்த பாரம்பரியத்தை மீட்கும் தற்போதைய முயற்சிகளைக் குறிப்பிட்டு, 2014 ஆம் ஆண்டு முதல், தமிழகத்தைச் சேர்ந்த பல சிலைகள் உட்பட கிட்டத்தட்ட 642 திருடப்பட்ட சிலைகள் மற்றும் தொல்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும், இந்த முயற்சிகள் பாராட்டத்தக்கவை என்றும் அவர் கூறினார்.

மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

[youtube-feed feed=1]