சென்னை: துணை வேந்தர் நியமன விவகாரம் தொடர்பாக  தமிழக அரசின் மீது ஆளுநர்  மீண்டும் குற்றச்சாட்டு  சுமத்தி உள்ளார்.   பல்கலைக்கழகங்களுக்கு ஏற்கனவே வெளியிட்டுள்ள தேடுதல் குழுவை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். யுஜிசி உறுப்பினர் இல்லாமல் தேடுதல் குழுவை அமைத்தால், அது நீதிமன்றத்தால் நிராகரிப்பட நேரிடும் என தெரிவித்து உள்ளார்.

இது குறித்து ஆளுனர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மாறில பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர், அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை). பாரதிதாசன் பல்கலைக்கழகம் (திருச்சிராப்பள்ளி). மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் (சேலம்) ஆகிய பல்கலைகழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமனம் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்த நபர்களை அடையாளம் காண தேடல் குழுக்களை அமைத்திருந்தார். அண்ணா பல்கலைக்கழகத்தின் தேடல் குழுவில், அண்ணா பல்கலைக்கழகச் சட்டம் மற்றும் 2018 ஆம் ஆண்டு பல்கலைக்கழக நிதி நல்கை குழுவின் நெறிமுறைகளின் படியும் ஆளுநரின் உறுப்பினர். தமிழ்நாடு அரசின் உறுப்பினர். பல்கலைக்கழக ஆட்சிக்குழுவின் உறுப்பினர் மற்றும் பல்கலைக்கழக நிதி நல்கை குழு தலைவரின் உறுப்பினர் ஆகியோர் அடங்குவர்.

பல்கலைக்கழக சட்டம் மற்றும் பல்கலைக்கழக நிதி நலகை குழுவின் நெறிமுறைகள், 2018-இன் படியும், பாரதிதாசன் பல்கலைக்கழகம் (திருச்சிராப்பள்ளி), மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் (சேலம்) ஆகியவற்றின் தேடல் குழுக்களில் தமிழ்நாடு அரசின் உறுப்பினர் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு மற்றும் ஆட்சிப் பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் பல்கலைக்கழக நிதி நல்கை குழுவின் உறுப்பினர் ஆகியோர் அடங்குவர். மேற்கண்ட பலகலைக்கழகங்களின் தேடல் குழுவில் பல்கலைக்கழக நிதி நல்கை குழு தலைவரின் உறுப்பினரை சேர்த்து தேடல் குழு அமைப்பது மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சட்டம் மற்றும் விதிகளின் வரம்பிற்குள் செயல்படும் வேந்தர் அவர்கள் துணைவேந்தருக்கான நியாயமான மற்றும் பாரபட்சமற்ற தேர்வுமுறையை உறுதி செய்வதற்காக உரிய சட்டவிதிகளின் படியே தேடல் குழுக்களை அமைத்துள்ளார். உயர்கல்வியில் சிறப்பு மற்றும் புதுமைகளை வளப்படுத்துவதற்கு முக்கிய காரணியான உயர்க் கல்வி அமைப்பில் சுதந்திரமான நடைமுறைகளை உறுதிப்படுத்துவதற்கு மாண்புமிகு ஆளுநரின் மேற்கண்ட முடிவு ஒத்துப்போகிறது.

அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு (திருச்சிராப்பள்ளி) அமைக்கப்பட்ட தேடல் குழுவினை அறிவிக்கை செய்திடவும் மற்றும் பெரியார் பல்கலைக்கழகத்தின் (சேலம்) தேடல் குழுவினை அறிவிக்கை செய்திடவும் முறையே 11 நவம்பர், 2024 மற்றும் 5 டிசம்பர், 2024 ஆகிய தேதிகளில் அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள் வாயிலாக ஆளுநர்- வேந்தர் அவர்கள் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். மேற்கண்டவாறு அமைக்கப்பட்ட தேடல் குழுக்களில் நான்காவது நபராக பல்கலைக்கழக நிதி நல்கை குழு தலைவரின் உறுப்பினரும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, உயர்கல்வித் துறை கீழ்கண்ட அரசாணைகளை பிறப்பித்துள்ளது.

(i) அரசு ஆணை (டி) எண்.271, உயர்கல்வித் துறை 9 டிசம்பர் 2024 பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் (திருச்சிராப்பள்ளி) தேடல் குழுவினை அறிவிக்கை செய்தல்:

(ii) அரசு ஆணை (டி) எண் 276 உயர்கல்வித் துறை, 13 டிசம்பர் 2024. சேலம் பெரியார் பல்கலைக்கழக தேடுதல் குழுவினை அறிவிக்கை செய்தல்.

(iii) அரசு ஆணை (டி) எண் 277, உயர்கல்வித் துறை 13 டிசம்பர் 2024 அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை) தேடுதல் குழுவினை அறிவிக்கை செய்தல்.
உறுப்பினரை வேண்டுமேன்றே நீக்கி வெளியிடப்பட்ட மேற்கண்ட அரசாணைகள் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறும் வகையில் அமைந்துள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட : 19.12.2024 தேதியிட்ட செய்திக்குறிப்பு எண்.52-இல், உள்ள தகவல்கள் உண்மைகளைத் திரித்தும் மற்றும் தவறாக வழிநடத்துவதாகவும் உள்ளது. ஜெகதீஷ் பிரசாத் சர்மா & பிறர் எதிர் பீகார் மாநிலம் & பிறர் என்கின்ற வழக்கில் (சிவில் மேல்முறையீடு எண் 5527-5543 of 2013, எஸ். எல்.பி (சி) எண் 18766-18782/2010) ஜூலை 17, 2013 தேதியிட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கண்ட செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பேராசிரியர் (டாக்டர்) பி.எஸ். ஸ்ரீஜித் எதிர் முனைவர் எம்.எஸ்.ராஜஸ்ரீ & பிறர் (சிவில் மேல்முறையீட்டு எண்கள் 7634-7635 of 2022, எஸ்எல்பி (சி) எண், 21108-21109 of 2021) என்கிற வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் தனது அக்டோபர் 21,2022 அன்றைய சமீபத்திய தீர்ப்பில், பல்கலைக்கழக நிதி நல்கை குழு நெறிமுறைகளுக்கு மாறாக அமைக்கப்பட்ட தேடல் குழுவின் பரிந்துரையின் பேரில் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட எந்தவொரு நியமனமும் தொடக்கத் திலிருந்தே செல்லுபடியாகாது என்று உத்தரவிட்டும் பல்கலைக்கழக நிதி நல்கை குழு நெறிமுறைகள் மாநிலத்தால் குறிப்பாக ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் மாநில சட்டம் மேலோங்கும் என்ற வாதத்தை நிராகரித்தும் மாண்புமிகு நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட மேற்கூறிய அறிவிக்கைகள் வேந்தரால் அமைக்கப்பட்ட தேடல் குழுக்களுக்கு வேறுபட்டவை மேலும் தற்போதுள்ள பல்கலைக்கழக நிதி நல்கை குழு விதிமுறைகள் மற்றும் மாண்புமிகு இந்திய உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய ஆணைகளுக்கு முரணானவை தொடக்கத் திலிருந்தே செல்லுபடியாகாது. என்பதால் இது பல்கலைக்கழக நிதி நல்கை குழு தலைவரின் உறுப்பினர் இல்லாமல் அரசால் அமைக்கப்பட்ட தேடல் குழுவின் செயல்பாடுகள் மாண்புமிகு நீதிமன்றங்களால் ரத்து செய்யப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நமது பல்கலைக்கழகங்கள் மற்றும் மாணவர்களின் துணைவேந்தர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பங்கு அதிமுக்கியமானது, மேலும் துணைவேந்தர் பதவி நிரப்பப்படாமல் வைத்திருப்பது நமது மாணவர்களின் நலனை பாதிக்கும் செயலாகும்.

அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளி) மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் (சேலம்) ஆகியவற்றின் துணைவேந்தர்களை நியமிப்பதற்காக அரசால் வெளியிடப்பட்ட தேடல் குழுவானது. ஆனநர் வேந்தர் அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட தேடல் குழுவிற்கு முரணாக உள்ளதால் மேற்கண்ட அரசாணைகளை, திரும்ப பெறுமாறு தமிழ்நாடு அரசுக்கு வேந்தர் வலியுறுத்தியுள்ளார். மேலும் பல்கலைக்கழக நிதி நல்கை குழு தலைவரின் உறுப்பினர் உள்ளடக்கிய துணைவேந்தர் தேடல் குழுவை அறிவிக்கை செய்திடுமாறு தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

 இவ்வாறு அதில்  கூறியுள்ளார்.