அயோத்தி
தீபாவளி அன்று அயோத்தி ராமர் கோவிலில் அயிரம் விளக்கு ஏற்றி பூஜை செய்ய அனுமதிக்க விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த மடாதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அயோத்தி நகரில் ராமர் பிறந்த இடத்தில் பாபர் மசூதி அமைக்கப்பட்டுள்ளதாக வெகுநாட்களாகச் சர்ச்சை உள்ளது. கடந்த 1992 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி அன்று இந்து மத ஆர்வலர்களால் இந்த மசூதி இடித்து நொறுக்கப்பட்டது. அதன்பிறகு அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட இந்து அமைப்பினரும் மீண்டும் மசூதியைக் கட்ட இஸ்லாமியர்களும் முயன்று வருகின்றனர்.
இந்த வழக்கு கடந்த 27 வருடங்களாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் இந்த வழக்கு விசாரணை வரும் 17 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அடுத்த மாதம் 18 ஆம் தேதி அன்று தீர்ப்பு வெளி வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் மாதங்களில் நிறைய பண்டிகைகள் வருகின்றன. அத்துடன் பாபர் மசூதி இடிப்பு நாள் டிசம்பர் 6 ஆகும். எனவே அயோத்தியில் அசம்பாவிதங்களைத் தடுக்க மாவட்ட நீதிபதி டிசம்பர் 10 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் அயோத்தி நகரில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தீபாவளி நேரத்தில் குறிப்பிட்ட நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் பட்டாசு விதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த மடாதிபதிகள் மற்றும் அமைப்பின் செய்தி தொடர்பாளர் சரத் சர்மா உள்ளிட்டோர் காவல்துறை துணை ஆணையரை சந்தித்துள்ளனர்.
அப்போது அவர்கள் ராமர் கோவில் வளாகத்துக்குள் தீபாவளி அன்று ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றி பூஜை நடத்த அனுமதி கோரி உள்ளனர். வட இந்தியாவில் பலர் தீபாவளியை ராமர் வனவாசம் முடிந்து அயோத்திக்குத் திரும்பிய நாள் எனக் கொண்டாடுவது வழக்கம் என்பதையும் அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
அவர்களின் கோரிக்கையை துணை ஆணையர் மனோஜ் மிஸ்ரா நிராகரித்துள்ளார். அவர், “இந்த விவகாரம் தற்போது உச்சநீதிமன்றத்தில் உள்ளது. எனவே இந்த ஒரு புதிய செயலுக்கும் அனுமதி கிடையாது. இவ்வாறு விளக்கு ஏற்றி பூஜை நடத்த விரும்புவோர் உச்சநீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.