டில்லி
அயோத்யா ராமர் கோயில் விவகாரத்தில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் தலையீட்டுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பும் அயோத்யா சன்யாசிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அயோத்யாவில் ராமர் கோயில் அமைப்பது பற்றிய வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சுமுகமான தீர்வு கண்டு கோயில் அமைக்க வேண்டும் என பல இந்து அமைப்புக்கள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் வாழும் கலை என்னும் யோகா அமைப்பை அமைத்த யோகா குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ராமர் கோயில் கட்டுவதைப் பற்றி பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு வருகிறார்.
இதற்கு விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட பல இந்து அமைப்புக்களும், அயோத்யாவை சேர்ந்த சன்யாசிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விஸ்வ இந்து பரிஷத்தின் தலைவர்களில் ஒருவர், “இந்த நேரத்தில் எந்த ஒரு மத்தியஸ்தமும் தேவை இல்லை. ஏற்கனவே இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. மேலும் உ பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் ரவிசங்கரின் தலையீட்டை சிறிதும் விரும்பவில்லை” என கூறி உள்ளார்.
அயோத்யாவின் சன்யாசிகளில் ஒருவரான பண்டிடி கல்கி ராம், “ரவிசங்கருக்கு இதில் ஏதோ ஒரு தனிப்பட்ட நோக்கம் உள்ளது. ராம் ஜென்ம பூமி என்பது உணர்ச்சி பூர்வமான ஒன்று. ரவிசங்கர் தீர்த்து வைக்க இது வாய்க்கால் தகராறு இல்லை. முதலில் அவரை மத்தியஸ்தம் செய்ய அழைத்தது யார் என சொல்லட்டும். அவருடைய சொந்த நன்மைக்காக இதில் தலையிடத் தேவையில்லை. எந்த ஒரு குழுவும் அவரை ஒரு மத்தியஸ்தம் செய்பவராக ஒப்புக் கொள்ளவிலை
அவர் ஒரு நாடகக்காரர். அவருடைய அமைப்பு ஆடலும் பாடலும் கற்றுத்தரும் நிறுவனம். தியானத்தைப் பற்றி தெரியாமலே தியான அமைப்பு நடத்தி வருகிறார். ஏற்கனவே காஷ்மீர் பிரச்னையை தீர்த்து வைத்து அமைதிக்கான நோபல் பரிசு வாங்க எண்ணி இருந்தார். அது தோல்வி அடையவே அயோத்யா வந்துள்ளார். ஆனால் முதல்வர் யோகி இந்த விஷயத்தில் அவர் உதவி தேவை இல்லை என சொல்லியது அவருக்கு ஒரு தோல்வி ஆகும்” என கூறி உள்ளார்.