ஏப்ரல் 18-ம் தேதி காலை பொன்பரப்பி கிராமத்தில் வாக்குப் பதிவு நடைபெற்று வந்தது. அப்போது, அங்கே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் சின்னமான பானையைத் தூக்கிவந்த ஒரு பிரிவினர் ரோட்டில் போட்டு உடைத்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டதில் ஒருவர் காயமடைந்தார்.

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இயக்குநர் வெற்றிமாறனின் ஃபேஸ்புக்கில் சாதி வேண்டாம் என்ற ரீதியில் பதிவு செய்திருந்தாலும், வார்த்தைகள் அனைத்துமே சாதி ரீதியாகவும் ஒருமையிலும் இருந்தது.

இது தொடர்பாக இயக்குநர் வெற்றிமாறன் கூறியதாவது: எனக்கு சாதிகள் அற்ற சமத்துவமான, சாதி வேறுபாடு, மத வேறுபாடுகள் அற்ற தமிழ் இனம் தான் தேவை. சாதி பாகுபடுகள் எள்ளவும் இல்லாத சூழல் தான் எனக்கு தேவை. ஆனால், அப்பதிவில் பயன்படுத்தி இருக்கிற வார்த்தைகளுடைய தன்மையில் நான் என்னை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டேன். ஃபேஸ்புக்கில் நான் எதுவும் பதிவிடவில்லை. நான் யாருக்கும் பேட்டியும் கொடுக்கவில்லை. அப்பதிவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. அப்பதிவின் கருத்துகளோடு நான் ஒத்துப் போனாலும், அதை தெரிவித்திருக்கிற விதத்தில் நான் உடன்படவில்லை என கூறியுள்ளார்.