டில்லி:
மூத்த வழகறிஞரும், பாஜக மூத்த தலைவருமான ராம்ஜெத்மலானி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் ராமதாஸ் உள்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், இந்திய உச்சநீதிமன்றத்தின் அழியாப் புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞருமான ராம்ஜெத்மலானி அவர்கள் தனது 95ஆவது வயதில் மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு பெரும் துயரமடைந்தேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்ட அறிவுக் கூர்மையும், கருத்துரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் போற்றுவதிலும் – அவற்றை நிலைநாட்டிக் காப்பதிலும் – தனித்துவம் மிக்க ஆர்வமும் வேகமும் கொண்ட ராம்ஜெத்மலானி அவர்கள், தனது 17 வயதில் சட்டப்படிப்பை முடித்து, 18 வயதில் வழக்கறிஞர் ஆனவர். விசாரணை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை பல்வேறு நட்சத்திர வழக்குகளில் முத்திரை பதிக்கும் வாதங்களை முன் வைத்து- வழக்கறிஞர் தொழிலில் பவளவிழா கண்டவர். நீதிமன்றங்களில் கோடை இடியாக முழங்கியவர்.
உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞர் தலைவர் கலைஞரிடம் நெருக்கமான நட்பும், ஆழ்ந்த நேசமும் கொண்டிருந்தவர். எப்போது சென்னை வந்தாலும், தலைவர் கலைஞர் அவர்களை நேரில் பார்த்து நலம் விசாரிக்காமல் அவர் டெல்லி திரும்பியதில்லை. உச்சநீதி மன்றத்தின் வழக்கறிஞர் சங்கத் தலைவராக, இந்திய பார்கவுன்சில் தலைவராகப் பணியாற்றி- சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட புதுமையான, பொருள் பொதிந்த,நுணுக்கமான, சட்ட வாதங்களை எடுத்து வைத்து- நீதி பரிபாலனத்தின் நம்பிக்கை மிக்க தூதுவராகத் திகழ்ந்தவர்.
மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராக சிறப்பாகப் பணியாற்றிய அவர், மறைந்த பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய சட்ட அமைச்சர் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் போன்ற முக்கியப் பொறுப்புகளை வகித்து- சுயமரியாதையுடன் சுதந்திரமாகப் பணியாற்றியவர். செப்டம்பர் மாதத்தில் பிறந்து, கடந்த 2017 அதே செப்டம்பர் மாதத்தில் தனது வழக்கறிஞர் தொழிலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ராம்ஜெத்மலானி அவர்கள், இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் நம்மிடமிருந்து நிரந்தரமாக விடை பெற்று விட்டார் என்பது சட்ட அறிஞர்களுக்கும், நீதியரசர்களுக்கும், ஜனநாயகத்தின் மீது பற்று கொண்டோர்க்கும் பேரிழப்பாகும்.
எவ்வளவு பெரிய இடத்தில் ஊழல் நடைபெற்றாலும், யார் மூலம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் வந்தாலும், அவற்றை முதலில் எதிர்த்து நிற்கும் மனவலிமையும் அரிய ஆற்றலும் பெற்ற திரு ராம்ஜெத்மலானியை இழந்திருப்பது அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி நாட்டிற்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, வழக்கறிஞர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள இரங்கல் செய்தியில், சட்ட மாமேதை, ஜனநாயகக் காவல் அரண், ஆருயிர் ராம்ஜெத்மலானி மறைந்தார் என்ற செய்தி, என் உச்சந்தலையில் விழுந்த பேரிடியாக, வேதனை யால் துடிக்கின்றேன். அவருக்கு நிகரான இன்னொரு வழக்கறிஞரை இந்தியாவில் என்னால் அனுமானிக்க முடியாது. உலோகங்கள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து, பாறையில் உருண்டால் எழும் கம்பீரக் குரலில், அவர் வாதங்களை எடுத்து உரைக்கும் பாங்கில், நீதிபதிகள் திகைப்பர். எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் மருள்வர். 1975 நெருக்கடி நிலை காலத்தில், மும்பை உயர்நீதிமன்றத்தில், சர்வாதிகாரக் குரல் வளையைத் தன் வாதத்தால் முறித்து, நீதியை நிலைநாட்டினார். தலைசிறந்த எழுத்தாளர். அவருடைய ஆங்கிலக் கட்டுரைகள் தாங்கிய மாத இதழ் தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தது. அவருடைய சட்டத்துறை வாழ்க்கை அனுபவங்களை, அற்புதமான ஒரு ஆங்கில இலக்கியமாகப் படைத்து இருக்கின்றார்.
அவர் பிறந்த நாள் செப்டெம்பர் 14. ஆண்டுதோறும் செப்டெம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டுப் பணிகளில் இருந்தபோதும், செப்டெம்பர் 14 இல் மும்பை சென்று, ராம் ஜெத்மலானிக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதைப் பாசக் கடமையாகக் கொண்டு இருந்தேன். அவர் தன் சொந்த மகனைப் போல என்னை நேசித்தார். என் வேண்டுகோள் எதையும் அவர் நிராகரித்தது இல்லை. இராசபாளையத்தில் முன்னாள் முதல்வர் குமாரசாமி ராஜா அஞ்சல் தலையை வெளியிட்டு விட்டு, கலிங்கப்பட்டி இல்லத்திற்கு வந்து, என் தாயார் உணவு படைக்க உண்டு மகிழ்ந்தார்.
ராஜீவ் காந்தி துன்பியல் நிகழ்வில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் தூக்குக் கயிறை அறுத்த வீரவாள்தான், ஜெத்மலானியின் வாதம் ஆகும். ஆயிரம் அலுவல்கள் அவரை முற்றுகை இட்டுக்கொண்டு இருந்த வேளையில், எனக்காக வாருங்கள் என்ற வேண்டுகோளை ஏற்று, சென்னைக்கு வந்து உயர்நீதிமன்றத்தில், மூவர் தூக்குக்குத் தடை ஆணை பெற்றுத் தந்தபோது, திரண்டு இருந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் முன்னிலையில், வைகோவுக்கு நன்றி சொல்லுங்கள் என்று பிரகடனமே செய்தார். ஏறத்தாழ இரண்டரை ஆண்டுக்காலம் உச்சநீதிமன்றத்தில் மூவர் தூக்கு வழக்கில், அனைத்து அமர்வுகளிலும் பங்கேற்றார். அவரது வாதத் திறமைதான், தூக்குக் கயிறைத் தூக்கி எறிந்தது,
சென்னையில் அவர் தங்கி இருந்த விடுதியில் கீழே விழுந்து, தலையில் காயம்பட்டு, இரத்தம் கொட்டியதைப் பொருட்படுத்தாது இருந்த அவரை, நான் அப்பல்லோ மருத்துவமனைக்குக்கொண்டு போய்ச் சேர்த்து சிகிச்சை அளித்தேன். அவரது மகனிடம் அலைபேசியில் பேசியபோது, எனக்கு இங்கே ஓர் மகன் இருக்கின்றார், அவர்தான் வைகோ என்றார்.
வீரப்பன் வழக்கில் தூக்குத் தண்டனை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மீசை மாதையன் உள்ளிட்ட ஐவரின் வழக்கிற்காக, கொளத்தூர் மணியும், ஹென்றி திபேனும் அணுகியபோது. என் வேண்டுகோளை ஏற்று, கட்டணம் எதுவும் பெறாமலேயே, உச்சநீதிமன்றத்தில் வாதாடி ஐவர் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வைத்தார்.
ஈழத்தில் இனப்படுகொலை குறித்து நான் தயாரித்த Genocide of Eelam Tamils Hearts bleed என்ற நூலையும் குறுவட்டையும், தில்லியில் வெளியிட்டு உரை ஆற்றும்போது, உயிரோடு இருக்கும் வரை வைகோவுக்காக, ஈழத்தமிழர்களைக் காக்க அனைத்தையும் செய்வேன் என்று சபதம் பூண்டார். அதே நூலை, மராத்தியில் மொழிபெயர்த்து, மும்பை செம்பூர் தமிழ்ச் சங்க அரங்கில் வெளியிட்டபோது, ஈழத்தமிழர்களுக்காக உச்சநீதிமன்றத்திலும் வாதாடுவேன் என்றார்.
சொல்லில் மட்டும் அல்ல, நெஞ்சில் அஞ்சாத உரமும் துணிவும் கொண்டவர். மூவர் தூக்குத்தண்டனையை ரத்து செய்ததற்காக, அவருக்கு சென்னையில். ம.தி.மு.க. வழக்கறிஞர் அணி சார்பில். மிகப்பெரிய நன்றி பாராட்டும் விழா நடத்தியபோது. மிகவும் மனம் நெகிழ்ந்து பேசினார். 2014 ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நான் போட்டியிட்டபோது. அவராகவே வந்து, ஐந்து இடங்களில் எனக்காகப் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரம் முடிந்து அவர் விடைபெறும் முன்பு, அவர் பயன்படுத்துகின்ற சாம்சனைட் பெட்டி, அழகாக இருக்கிறதே என்றேன். ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் வாங்கினேன் என்றார். ஒரு மாதம் கழித்து நான் தில்லி சென்றபோது, அதே சாம்சனைட் பெட்டியை என் கையில் கொடுத்து, என் நினைவாக நீங்கள் பயன்படுத்துங்கள் என்றார். என் கண்களில் நீர் தழும்பியது.
கடந்த ஓராண்டு காலமாகவே அவருக்கு உடல்நலம் இல்லை என்பதால், ஒவ்வொரு முறையும் அவரது இல்லம் சென்று, குறைந்தது, இரண்டு மணி நேரமாவது அவருடன் உரையாடி விட்டு வந்தேன். இம்முறை நான் மாநிலங்கள் அவை உறுப்பினராகத் தெரிவு பெற்று தில்லி சென்று அவரைச் சந்தித்தபோது, படுத்த படுக்கையாக இருந்தார். என் முகத்தை வருடிக்கொடுத்து வாழ்த்தினார். பதவிப் பிரமாணம் எடுத்த பின்னர், நான் சென்னை திரும்புவதற்கு முதல் நாள் மீண்டும் அவரது இல்லத்திற்குச் சென்றபோது, அவரது பேச்சு மிகவும் குறைந்து இருந்தது. அந்த நிலையிலும், என்னிடம் அன்பும், பாசமும் பொங்கப் பேசினார். மறுநாள் அவரது உதவியாளர் என்னிடம், உங்களிடம் பேசியதுதான், கடைசிப் பேச்சு. அதன்பிறகு பேச்சு நின்று விட்டது என்றபோது, என் இதயம் கலங்கித் துடித்தது.
கடைசியில் அவர் உணவு ஏற்கவில்லை; உயிர் ஊசலாடுகின்றது நிலையில், அவரது உதவியாளர் ஆஷிஷ் என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டு சொன்னார். அதைக் கேட்டபோது, நான் பட்ட வேதனையை வடிக்கச் சொற்கள் இல்லை. நான் இராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பும்போது, தலைமை மருத்துவர், இரண்டு வார காலம் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கக் கூடாது, பயணிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார். எந்த முகம் என்னைப் பார்க்கும்போதெல்லாம் பரவசப்பட்டதோ, எந்தக் கரங்கள் என்னை அன்போடு பற்றிக் கொண்டதோ, அந்த முகத்தைக் கடைசியாக இனியொரு முறை பார்ப்பதற்கு இயலாத, இப்படி ஒரு துன்பமா எனக்கு? நான் மிகவும் நொறுங்கிப் போய்விட்டேன்.
அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும், அவரை மதித்து நேசிக்கும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஜனநாயக உரிமைக் காவலர்கள் அனைவருக்கும், பொங்கி வரும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அந்த மாமனிதரின் நினைவுகள், என் இதயத்தில் என்றும் சுழன்றுகொண்டே இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான இராம் ஜெத்மலானி உடல்நலக் குறைவால் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
இந்திய சட்டத்துறை வரலாற்றையும், அரசியல் வரலாற்றையும் இராம்ஜெத்மலானியை தவிர்த்து விட்டு எழுதி விட முடியாது. அந்த அளவுக்கு இரு துறைகளிலும் பல சாதனைகளை அவர் படைத்திருக்கிறார். பள்ளி வகுப்புகளில் இரட்டைத் தேர்ச்சி பெற்ற அவர், தமது 17-ஆவது வயதில் சட்டப்படிப்பை நிறைவு செய்தார். அதன்பின்னர் அவருக்காக விதிகள் தளர்த்தப்பட்டு 18-ஆவது வயதிலேயே வழக்கறிஞராக பணியாற்ற அனுமதிக்கப்பட்டார். அதன்பின் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பல முக்கிய வழக்குகளில் வாதிட்டிருக்கிறார். இந்தியாவில் 75 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக பணியாற்றிய பெருமை இராம்ஜெத்மலானிக்கு மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. சட்டக் கல்லூரி பேராசிரியராக ஏராளமான வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளை உருவாக்கிய பெருமைக்கும் ஜெத்மலானிக்கு உண்டு.
இராம்ஜெத்மலானியின் வாழ்க்கை சாகசங்கள் நிறைந்ததாகும். நெருக்கடி நிலை காலத்தின் போது, இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த ஜெத்மலானி மத்திய அரசை கடுமையாக விமர்சித்ததற்காக அவரை எப்படியும் கைது செய்து விட வேண்டும் என்று மத்திய அரசு துடித்ததும், அவற்றை முறியடித்து கனடாவுக்கு தப்பிச் சென்ற ஜெத்மலானி அங்கிருந்தவாறே நெருக்கடி நிலைக்கு எதிராக போராடியதும் இளம் அரசியல்வாதிகள் அறிந்து கொள்ள வேண்டிய துணிச்சல் வரலாறு ஆகும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்காகவும், பின்னர் 7 தமிழர்களை விடுதலை செய்வதற்காகவும் சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகளில் வாதிட்டவர். ஏழைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை இலவசமாக நடத்திக் கொடுத்த வரலாறும், பெருமையும் இவருக்கு உண்டு.
இராம்ஜெத்மலானியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் வழக்கறிஞர் சமுதாயத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.