மும்பை
பிரபல பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்துள்ளார்.
அங்குர் என்னும் இந்திப்படத்தின் மூலம் பிரபல நடிகை ஷபானா ஆஸ்மி அறிமுகம் ஆனார். அதன்பிறகு அவர் பல படங்களில் நடித்துப் புகழ் பெற்றுள்ளார். இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் பல விருதுகளைக் குவித்துள்ள ஷபானா ஆஸ்மி அரசியல் குறித்து பல கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவித்து வருகிறார்.
நேற்று மாலை ஷபானா மும்பை – புனே விரைவுச் சலையில் கார் மூலம் சென்றுக் கொண்டிருந்தார். மும்பையில் இருந்து சுமார் 60 கிமீ தொலைவில் இருக்கும் கலாபூரில் இவர் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இவர் சென்றுக் கொண்டிருந்த கார் மீது ஒரு டிரக் மோதி உள்ளது.
இந்த விபத்தில் ஷபானா ஆஸ்மி பலத்த காயம் அடைந்துள்ளார். அவர் மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள ரைகட் மாவட்டத்தின் பன்வேல் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.