ஆமதாபாத்:

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு மோடி முதல்வராக இருந்தபோது வரலாறு காணாத அளவில் மிகப்பெரிய கலவரம் நடைபெற்றது. உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கலவரத்துக்கு அப்போதைய முதல்வர் மோடிதான் காரணம் என கூறப்பட்டது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. ஆனால், மாநில காவல்துறை கலவரத்துக்கும் மோடிக்கும் தொடர்பில்லை என்று அறிக்கை தாக்கல் செய்ததை தொடர்ந்து, இது தொடர்பான வழக்கில் இருந்து  நரேந்திர மோடி உள்பட சிலர் ஆமதாபாத் நீதி மன்றதால் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் இருந்து மோடி விடுவிக்கப்பட்டது குறித்து, பாதிக்கப்பட்டோர் சார்பாக  எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு வரும் 26ம் தேதி குஜராத் ஐகோர்ட்டு வெளியிடும் என தெரிவித்துள்ளது.

கடந்த 2002-ல் குஜராத் நடந்த கலவரத்தின் போது ஆமதாபாதில் உள்ள குல்பர்க் ஹவுசிங் சொசைட்டி எனுமிடத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் காங்கிரஸ் முன்னாள் எம்பி இஷான் ஜாப்ரி உள்ளிட்ட 69 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. இதனிடையே இந்த வழக்கு விசாரணையை முடித்துக் கொள்வதாகக் கூறி சிறப்பு நீதிமன்றத்தில சிறப்பு விசாரணைக்குழு (எஸ்ஐடி) கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோருக்கு குஜராத் கலவரத்தில் தொடர்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து கலவரம் தொடர்பாக நரேந்திர மோடி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்யக் கோரி பெருநகர நீதிமன்றத்தில் இஷான் ஜாப்ரியின் மனைவி ஜகியா ஜாப்ரி மனு தாக்கல் செய்தார்.

இதை பெருநகர நீதிமன்றம் கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஜகியா ஜாப்ரி கடந்த 2014ம் ஆண்டு மேல்முறையீடு செய்தார்.

இந்தமனு உயர் நீதிமன்ற நீதிபதி சோனியா கோகனி முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது,  ஜகியா ஜாப்ரி மற்றும் எஸ்ஐடி வழக்குரைஞர்கள் தரப்பில், கலவரம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவு நகல்களும், விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கலவர வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்கள், உத்தரவுகளும் தாக்கல் செய்யப்பட்டன.

இவை அனைத்தையும்  பரிசீலித்த நீதிபதி கோகனி, ஜாப்ரியின் மனு மீதான தீர்ப்பு வரும் 26ம் தேதி வெளியிடப்படும் என அறிவித்தார்.

இந்த கலவர வழக்கில் மோடி மீண்டும் சேர்க்கப்படுவாரா அல்லது விடுவிக்கப்படுவாரா என்பது அன்று தெரியவரும்.