ஐதராபாத்:
ஐதராபாத்தில் உள்ள மெக்கா மசூதி குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்று, பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு இன்று இறு தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
11 ஆண்டு விசாரணைக்குப் பின்னர் , தேசிய குற்றப்புலனாய்வு அமைப்பால் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரில் 5 பேரின் தண்டனையை நீதிமன்றம் இன்று அறிவிக்க இருப்பதாக கூறி உள்ளார். இதன் காரணமாக நீதி மன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு மே மாதம் 18ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று ஐதராபாத்தில், சார்மினார் அருகே உள்ள மெக்கா மசூதியில் தொழுகையின்போது சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வீசப்பட்டது. இதில் 9 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இந்த குண்டுவெடிப்பில், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களான அசீமானந்த், தேவேந்திர குப்தா, லோகேஷ் ஷர்மா, பாரத்பாய், ரஜேந்தர் செயத்ரி உள்ளிட்ட 8 பேர் குற்றவாளிகள் என என்.ஐ.ஏ குற்றம்சாட்டியது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்ற வந்த நிலையில், இவர்களில் 5 பேருக்கான தண்டனையை என்ஐஏ வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் இன்று வழங்குவதாக தெரிவித்து உள்ளது.. இதன் காரணமாக நீதிமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இன்று ஆந்திராவில் முழு அடைப்பு நடைபெற்று வரும் நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படுமா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.