பீகார் மாநிலம் பூர்னியா பகுதியில் இரண்டு பெண்களை திருமணம் செய்த நபர் இனி வாரத்தில் 4 நாட்கள் முதல் மனைவியுடனும் மீதம் 3 நாட்கள் இரண்டாவது மனைவியுடனும் குடும்பம் நடத்த வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பூர்ணியாவின் ருபாலி காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த சங்கர் ஷா என்பவர் மீது மிர்கஞ்ச் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த அவரது முதல் மனைவி பூர்ணிமா, பூர்ணியா மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் சங்கர் ஷா-வுக்கும் தனக்கும் கடந்த 2000மாவது ஆண்டு திருமணமானதாகவும் இவர்களுக்கு 22 மற்றும் 18 ஆகிய வயதில் இரண்டு மகன்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் தனக்கு தெரியாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட சங்கர் ஷா தனக்கு குடும்ப செலவுக்கு பணம் வழங்குவதை நிறுத்திவிட்டதாக புகாரில் கூறியுள்ளார்.

இந்த புகார் பூர்னியா மாவட்ட காவல்துறை குடும்ப ஆலோசனை மையத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில் இதுகுறித்து சங்கர் ஷா மற்றும் அவரது இரண்டு மனைவிகளையும் அழைத்து விசாரணை நடத்தப்பட்டது.

இதில், முதல் மனைவி பூர்ணிமாவுக்கு மாதம் ரூ. 4000 வழங்க சங்கர் ஷா ஒப்புக்கொண்டதோடு மகன்களின் படிப்பு செலவையும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

தவிர, வாரத்தில் 4 நாட்கள் முதல் மனைவி குடும்பத்துடனும் மற்ற 3 நாட்கள் இரண்டாவது மனைவி குடும்பத்துடனும் இருக்க குடும்ப ஆலோசனை மையம் அறிவுறுத்தியுள்ளது.