வேங்கைவயல்: புதுக்கோட்டை அருகே வேங்கைவயல் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது. இதில் திடீர் மாற்றமாக சிபிசிஐடிக்கு இந்த வழக்கை மாற்றி விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏற்ற சிபிசிஐடி காவல்துறையினர் , வேங்கைவயல், இறையூர், கீழ முத்துக்காடு ஆகிய கிராமங்களில் உள்ள பொதுமக்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும்,  அப்பகுதியில் உள்ள நபர்களின் டிஎன்ஏ மாதிரிகளை எடுத்து குடிநீர்த் தொட்டியில் கலக்கப்பட்ட மாதிரிகளுடன் ஒப்பிட்டு சோதனை நடத்தி வருகின்றனர் 11 நபர்கள் மீது டிஎன்ஏ பரிசோதனை செய்ய உத்தரவிட்டனர்.  ஆனால், இதற்கு பலர் ஆஜராக மறுத்து வந்தனர். பின்னர்,  11 பேரில்,  மூன்று நபர்கள் மட்டுமே புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் டிஎன்ஏ பரிசோதனை செய்து கொண்டனர்.

டிஎன்ஏ சோதனைக்கு ஆஜராக மீதமுள்ள நபர்கள் நாங்கள் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு இருக்கிறோம், எங்களை எதற்கு பரிசோதனை செய்ய வேண்டுமென கூறுகிறீர்கள் என்று கேட்டு மதுரை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். மதுரை நீதிமன்றம், புதுக்கோட்டை நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டி ருந்தது. அதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஜுன் மாதம்  30-ம் தேதி நீதிபதி ஜெயந்தி, டிஎன்ஏ பரிசோதனை செய்ய மறுத்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

பிறகு ஜூலை 1-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்று 6 பேரும் ஆஜரான நிலையில் மீண்டும் விசாரணை மேற்கொண்ட நீதிபதி ஜூலை  4-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதனைத் தொடர்ந்து  நடைபெற்ற வழக்கின்  விசாரணைக்கு வந்தபோது 8 நபர்களும் ஆஜரானார்கள். அவர்களை நாளை (5-ம் தேதி) டிஎன்ஏ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக  இதுவரை 21 பேரிடம் டி என் ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வேங்கைவயலை சேர்ந்த ஒரு சிறுவன், இறையூர் பகுதியை சேர்ந்த 3 சிறுவர்கள் என 4 சிறுவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனைக்காக இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த மாதிரி சேகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது  குழந்தைகள் நலக்குழுவின் வழிகாட்டுதலோடு புதுக்கோட்டை அரசு புதிய மருத்துவமனையில் இன்று பரிசோதனை நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து சிறுவர்களுக்கு டிஎன்ஏ சோதனை நடத்தப்படுகிறது.