சென்னை:  குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பான  வேங்கைவயல் வழக்கில்,  குற்றம் சாட்டப்பட்ட காவலர் உள்பட 3 பேரும்  இன்று விசாரணைக்காக  நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர்.

வேங்கைவயல் வழக்கில் குற்றம்சாட்டி சிபிசிஐடி குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளான , அந்த பகுதியைச் சேர்ந்த காவலர் உள்பட 3 பேரும்  இன்று புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இ சம்பவத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக குற்றவாளிகள் கண்டறியப்படாமல் இருந்த நிலையில், அண்மையில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

அதில், குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்தவர்கள் என அதே பகுதியைச் சேர்ந்த மூன்று நபர்களை அடையாளம் காட்டினார். . குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலினத்தவர் என்பதால் பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதா என பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மேலும் இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், சிபிசிஐடி தரப்பில், குற்றப்பத்திரிகையில்  தெரிவிக்கப்பட்டுள்ள 3 பேர் குறித்தும்,  றிவியல் சாட்சியங்கள் உள்ளதாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் வேங்கை வயல் தொடர்பான வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது என்று குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூவர் சார்பில் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இது போல சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டதில், இந்த வழக்கு, பட்டியலின வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வராததால், வழக்கை நீதித்துறை நடுவர் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்ற மனு மீதான விசாரணை நடந்து வந்தது. இதுதொடர்பாக இரு தரப்பினரும் வாதங்களை முன் வைத்திருந்தனர். இதையடுத்து  சி.பி.சி.ஐ.டி., போலீஸ் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. வழக்கு வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் இருந்து நீதித்துறை நடுவர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இது வன்கொடுமை வழக்கு இல்லை என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் புதுக்கோட்டை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பாது குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேரும் விசாரணைக்கு ஆஜரானார்கள்.