சென்னை :
ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மூலம் தமிழகத்தின் விவசாய நிலங்களை அழிக்கும் நாசகாரத் திட்டத்தை செயல்படுத்த எண்ணும் மத்திய அரசின் திட்டத்தை தமிழக அரசும் மக்களும் எதிர்க்க வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
மீண்டும் ஓஎன்ஜிசி நிறுவனம் மூலம் ஹட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் மத்திய அரசு மேற்கொண்டுள்ளதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வேல்முருகன் தனது அறிக்கையில், ”தமிழக விவசாய நிலங்களை அழிப்பதற்கான முயற்சி இது. மோடியின் பாஜக ஆட்சி மத்தியில் ஏற்பட்டதிலிருந்தே அந்த அரசு மாநிலங்களின் உரிமைகளைப் பறித்துக் கொண்டு வருகிறது. மாநிலங்களை அரசியல் அதிகாரமற்ற உள்ளாட்சி அமைப்பு என்ற நிலைக்கு மாற்றிக்கொண்டிருக்கிறது.
குறிப்பாக தமிழ்நாட்டை உள்ளாட்சி அமைப்பு என்ற நிலையில்கூட வைக்காமல் தமிழ் என்ற ஓர் இன அடையாளமே கூடாது என்றும், தனது நலனுக்காக மட்டுமே மாநில அரசை பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில் தமிழ்நிலத்தையே அழித்தொழிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது. தற்போது இந்த நோக்கில் மோடி அரசு செயல்படுத்திவரும் நாசகாரத் திட்டம் அம்பலமாகியிருக்கிறது.
மத்தியில் ஆளும் மோடி அரசு தமிழ்நாட்டின் உயிராதாரமான விவசாய மண்டலமாக இருக்கும் காவிரி பாசனப்பகுதி தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் மீத்தேன், ஷேல், ஹைட்ரோ கார்பன் முதலான நச்சு வேதிப்பொருள்களை எடுப்பதற்கான 700க்கும் மேற்பட்ட கிணறுகளை அமைக்கும் பணிகளை ஓஎன்ஜிசி மூலம் முடுக்கிவிட்டிருக்கிறது.
இதனால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் எதற்கும் ஆகாத பாழ்நிலமாக்கப்படும். அதனால் வாழ முடியாத நிலையில் தமிழினமே ஒட்டுமொத்தமாக இடம்பெயர்ந்து தமிழினம் என்ற அடையாளமே இல்லாமல் போகும், எனல் கணக்குப் போட்டு மோடி அரசு காரியத்தில் இறங்கியிருக்கிறது.
மத்திய அரசு காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களை “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்” என்பதற்கு மாறாக அதனை அழித்தொழிக்கும் நாசகாரத் திட்டத்தினை ஓஎன்ஜிசி மூலம் செயல்படுத்திக் கொண்டிருப்பது ஆதாரங்களுடன் இன்று வெளி வந்துள்ளது.
அனுமதி பெறாத கிணறுகள் குறித்து காவிரி டெல்டா கண்காணிப்பகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் பெற்ற தகவல்களிலிருந்து இந்த வஞ்சகத் திட்டம் வெளிப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் 219 கிணறுகள் குறித்த ஆவணங்கள் இருக்கின்றன என்றாலும் கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் தன்வசம் 700 கிணறுகள் இருப்பதாக ஓஎன்ஜிசி சொல்கிறது என்பது மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் பெற்ற தகவல்களிலிருந்து தெரிய வருகிறது.
அந்த கிணறுகளில் 71 கிணறுகள் மட்டுமே இயங்கும் நிலையில் இருக்கின்றன ஆனால் அவற்றிற்கும் செயல்படுவதற்கான சுற்றுசூழல் உரிமம் இல்லை என்கிறது மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஆவணம். அதே நேரத்தில் 183 கிணறுகளில் உற்பத்தி நடப்பதாக ஓஎன்ஜிசி தெரிவிக்கிறது.
மேலே குறிப்பிட்ட எந்த கிணற்றுக்கும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஆவணங்களின்படி இயங்குவதற்கான ஒப்புதல் இல்லை. இவ்வாறு சட்டவிரோதமாகச் செயல்படும் ஓஎன்ஜிசியால் தொடர்ந்து நடைபெறும் விபத்துகள், நச்சு எண்ணெய் கசிவுகளால் விளைநிலங்கள்மற்றும் நீர்நிலைகள் மாசுபட்டன.
இந்த சட்டவிரோத திட்டங்களால் பேரழிவு சம்பவங்கள் 2008லிருந்தே நடந்துவருகின்றன என்பதுதான் உண்மை. ஓ என் ஜி சி இவற்றை எந்த அனுமதியும் பெறாமல்தான் இயக்கிவருகிறது என்பதுடன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதிலளிக்க வேண்டிய பொது அமைப்பாக ஓ என் ஜி சி இருந்தும், சுற்றுச்சூழல் உரிமம் உள்ளிட்ட அடிப்படை விவரங்களைக் கேட்டாலும் ஏதாவது காரணங்களைக் காட்டி, அதைச் சொல்வதில்லை என்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கை கூறுகிறது.
மொத்தத்தில் சட்டவிரோதமாகவே இந்த நாசகாரத் திட்ட தமிழ்நிலத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உடனடியாக இதற்கு தமிழக அரசு முடிவு கட்ட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.