சென்னை:
தனது மகள் திருமண ஏற்பாடு செய்வதற்காக, ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி பரோலில் வெளியே வந்த நிலையில், அவரது 51 நாள் பரோல் முடிவடைந்த நிலையில், நேற்று மாலை மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
மகளின் திருமணத்துக்காக கடந்த ஜூலை மாதம் 25-ம் தேதி ஒரு மாத பரோலில் வேலூர் சிறையில் இருந்து வெளியே வந்த நளினி, மேலும் பரோலை ஒரு மாதம் நீட்டிக்க சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவருக்கு 3 வாரம் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அதைத்தொடந்து அவரது பரோல் காலமான 51 நாட்கள் முடிவடைந்த நிலையில், நேற்று மாலை மீண்டும் வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
ராஜீவ்காந்தி கொலை கைதிகளான நளினி-முருகனின் மகள் ஹரித்ரா என்ற மேகரா. இவர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். தனது மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக பரோலில் வெளியே வந்த நளினி, மிகவும் எதிர்பார்த்து வந்த மகளின் திருமணம் ஏற்பாடகள் கைகூடாத நிலையில் சோகத்துடன் மீண்டும் சிறைக்கு சென்றார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை சத்துவாச்சாரியில் உள்ள திராவிட இயக்க தமிழர் பேரவை மாநில துணை பொதுச் செயலாளர் சிங்கராயர் விட்டில், அவரது தாயார் பத்மா, சகோதரி கல்யாணி மற்றும் சகோதரர் பாக்கியநாதன் உடன் பரோல் காலத்தை கழித்த நளினி, அவர்களிடம் இருந்து கண்ணீருடன் விடைபெற்றுச் சென்றார். நளினியின் உறவினர்கள், அவரை கண்ணீரோடு வழியனுப்பி வைத்தனர்.