வேலூர்:

கஸ்டு 5ந்தேதி தேர்தல் நடைபெற உள்ள வேலூர் மக்களவை தொகுதியில் இன்று மாலை 5 மணியுடன் தேரதல் பிரசாரம் முடிவடைகிறது.

பணப்பட்டுவாடா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு ஆகஸ்டு 5ந்தேதி தேர்தல்  நடைபெறும் பிரசாரம் என்று தேர்தல் அறிவித்தது. அதைத் தொடர்ந்து வேட்பு மனுத்தாக்கல் உள்பட தேர்தல் பணிகள் சுறுசுறுப்படைந்தன.

தேர்தலில் ஏற்கனவே போட்டியிட்ட அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் , ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் கதிர் ஆனந்த்தும்  போட்டியிடுகின்றனர்.  இவர்களுடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமியும் போட்டியிடுகிறார். டிடிவியின் அமமுக, கமலின் மநீம கட்சிகள் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொண்டன.  அங்கு தேர்தலில் 18 சுயேச்சைகள் உள்பட மொத்தம் 28 பேர் களத்தில் உள்ளனர்.

அங்கு முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக தலைவர் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் உள்பட கட்சித்தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

வரும் 5ம் தேதி (நாளை மறுதினம்) வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை யுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதனையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்த்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதன் காரணமாக வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டுமென தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தேர்தல் தொடர்பான எந்த கூட்டமோ, ஊர்வலமோ நடத்தக்கூடாது, திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், டிவிட்டர் அல்லது இது போன்ற சாதனம் வாயிலாக தேர்தல் விவகாரத்தை பொது மக்களின் பார்வைக்கு வைக்க கூடாது. அவற்றை மீறினால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126 படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம், அல்லது இவை இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசம்பாவிதங்களை தடுக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.