சென்னை

பாஜக நடத்தும் வேல் யாத்திரையில் அரசியல் நோக்கம் உள்ளதாக அக்கட்சி தமிழக பொதுச் செயலர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக சார்பில் நவம்பர் 6 முதல் முருகப்பெருமானின் புகழுக்காக ஒரு மாத வேல் யாத்திரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இதை தடை செய்யக் கோரும் வழக்கை இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

ஆனால் தமிழக பாஜக தலைவர் முருகன் இந்த யாத்திரை வெற்றிகரமாக நடந்தால் பாஜகவுக்கு இது ஒரு மாபெரும் திருப்பு முனையாகும் என்பதால் இதை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.   இந்நிலையில் தமிழக பாஜக பொதுச் செயலர் சீனிவாசன் ஒரு செய்தி ஊடகத்துக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் சீனிவாசன் கூறியதாவது :

:தமிழக அரசியல் பல வருடங்களாக இந்துக்களுக்கு எதிராக உள்ளது.  முதல்வர்கள் எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா அவ்வாறு இல்லை.  ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மீண்டும் இந்நிலை அதிகரித்துள்ளது.  ஆயினும் தற்போதைய அதிமுக அரசு இந்துக்கள் எதிர்ப்பு அரசியலில் ஈடுபடாமல் உள்ளது.

தற்போது இந்துக்கள் தனது மதம் குறித்த பெருமைகளையும் தனது கலாச்சாரத்தையும் எடுத்துரைக்க கடும் எதிர்ப்பு உள்ளது.  இதற்குப் பின்னால் ஒரு சர்வதேச சதி உள்ளது.  இதற்கு ஒரு சில அமைப்புக்கள் உதவி வருகின்றன.  இந்த சதியில் கடைசியாக அரங்கேறியது கறுப்பர் கூட்டம் யு டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தைக் கேவலம் செய்தது ஆகும்.  இவற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்ல நாங்கள் இந்த வேல் யாத்திரை நடத்த உள்ளோம்.

இந்துக்களின் ந்மபிக்கையை கேவலம் செய்வதில் திமுக, விசிக, இடது சாரிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி முன்னணியில் உள்ளன. நாங்கள் இதை மக்களுக்கு விளக்க உள்ளோம். சுதந்திரத்துக்குப் பிறகு நடந்த இந்துக்கள் போராட்டத்தில் ராமர் கோவில் முக்கியமானதாகும்.

இதில் ராமர் கோவிலை விட அதிக அளவில் இந்துக்கள் மீதான வெறுப்பு, சிறுபான்மையினரிடம் பகையைத் தூண்டுதல் ஆகியவற்றில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டன.   வேல் யாத்திரைக்குப் பிறகு தமிழகத்தில் இந்துக்கள் மீதான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு பெருமளவில் குறையும்.

தேர்தலுக்கு சில தினங்கள் முன்பு இந்த யாத்திரையை நடத்துவதில் எவ்வித தவறும் கிடையாது. நாங்கள் சமூக அமைப்பினர் இல்லை.  ஒரு அரசியல் கட்சியினர்.  எனவே எங்களது இந்த யாத்திரையில் அரசியல் நோக்கம் உள்ளது.   நாங்கள் வாக்காளர்களுக்கு இதன் மூலம் பணம் கொடுக்கவில்லை.  அவர்களது பெருமையை உணர செய்கிறோம்.

தற்போது பல விதங்களில் மக்கள் துயருற்று வருகின்றனர்.  ஆனால் அதைக் கவனிக்காமல் விசிக தலைவர் திருமாவளவன் மனுஸ்மிரிதி பிரச்சினையைக் கையில் எடுத்தது ஏன்?   அவருடைய கட்சி, திமுக, மற்றும் இடது சாரிகள் அரசியலில் இருந்து  கொண்டே இந்துக்களுக்கு எதிராக உள்ளனர்.   இதை எதிர்க்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு உள்ளது.  ஆகவே இந்த யாத்திரையை நடத்துகிறோம்.

அனைத்து கட்சிகளும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது பாஜகவை மட்டும் ஏன் குறை கூற வேண்டும்?  நாங்கள் நிச்சயமாக யாத்திரையின் போது கொரோனா விதிகளை மீற மாட்டோம்.   நீதிமன்றத்தில் எங்களுக்கு சார்பாகத் தீர்ப்பு கிடைக்கும்.  மூத்த தலைவர் அத்வானி முன்பு நடத்திய ரத யாத்திரை போல இதுவும் வெற்றி பெறும்.  இந்த யாத்திரை மூலம் நாங்கள் மக்களுக்கு எங்களுடைய பிரச்சாரத்தைச் செய்வோம்” என சீனிவாசன் தெரிவித்துள்ளார்.