சென்னை: தமிழக அரசின் தடை உத்தரவை மீறி  இன்று 3-வது நாளாக  செங்கல்பட்டில் இருந்து வேல்யாத்திரை செல்ல முயன்ற பாரதீய ஜனதா மாநில தலைவர் எல்.முருகன்  மீண்டும்  கைது செய்யப்பட்டார்.

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தமிழக பா.ஜ.க. சார்பில் தமிழகம் முழுவதும் ‘வெற்றிவேல் யாத்திரை’  நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. . இதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில்,  தடையை மீறி கடந்த 6-ந்தேதி திருத்தணியில் யாத்திரை தொடங்கியது. இதையடுத்து, மாநில பாஜக தலைவர்  தலைவர் எல்.முருகன்  உள்பட பாஜகவினை தடுத்து நிறுத்தி காவல்துறையினர்  கைது செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மாலையில் விடுவித்தனர்.

இந்த நிலையில் ‘வேல் தொடர்ந்து துள்ளி வரும். திட்டமிட்டபடி எல்லா இடங்களிலும் யாத்திரை நடைபெறும். யாத்திரையின் 2-வது நாள் பயணம் 8-ந்தேதி (நேற்று) சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் இருந்து தொடங்கும்’ என்று எல்.முருகன் அறிவித்தார். அதனை தொடர்ந்து சென்னை திருவொற்றியூரில் தடையை மீறி வேல் யாத்திரை தொடங்கிய எல்.முருகன் உள்ளிட்ட பாரதீய ஜனதாவினர் மீண்டும் போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்து அவர்களை விடுவித்தனர்.

இந்த நிலையில் எல்.முருகன் 3-வது நாள் பயணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் தடையை மீறி வேல்யாத்திரை மேற்கொள்ள முயன்றார். தமிழக அரசின் தடை உத்தரவை மீறி வேல்யாத்திரை செல்ல முயன்றதாக எல்.முருகன் கைது செய்யப்பட்டார். அவருடன் பாரதீய ஜனதாவினர் பலரும் கைது செய்யப்பட்டனர்.

[youtube-feed feed=1]