அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக வளாகத்தின் அருகே பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்ற தொடர் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக வேந்தர் மற்றும் துணை வேந்தர் உள்ளிட்டோர் அண்ணா பல்கலைக்கழகத்தின் அருகருகே வசித்து வரும் நிலையில் பாதுகாப்பு மற்றும் உளவுத் துறையின் அலட்சியத்தால் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது பெற்றோர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தை ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்.சி., ஐ.ஐ.எம். போன்ற மத்திய கல்வி நிலையங்கள் தவிர தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு நிகராக பாதுகாப்பான வளாகமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

189 ஏக்கர் பரப்பளவு கொண்ட அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் பல்வேறு துறை சார்ந்த படிப்புகளுக்கான தனித் தனி கட்டிடம் தவிர மாணவ மாணவியருக்கு தனித்தனியே விடுதிகளும் உள்ளன.

மாணவர்களுக்கு பல்வேறு நேரங்களில் வகுப்புகள் நடத்தப்படும் நிலையில் அவர்களுக்கு விடுமுறையும் வெவ்வேறு விதமாக இருந்து வருகிறது.

இதனால் மாணவ மாணவிகள் தவிர விடுதியில் உள்ள மாணவ மாணவிகளை பார்க்க வரும் பெற்றோர் மற்றும் உறவினர்களும் எந்த நேரத்திலும் வந்து செல்லும் வகையில் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் உள்ளது.

மேலும், பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவ மாணவிகளின் வாகனங்கள் தவிர வெளிநபர்களின் வாகனங்களும் ஆட்டோக்கள் மற்றும் பைக் டாக்சிகள் என பலவும் கட்டுப்பாடு இன்றி உள்ளே சென்று வரும் நிலை உள்ளது.

இந்த சூழலில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றுள்ள அசம்பாவித சம்பவத்தை அடுத்து இங்கு வரும் வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்கள் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதைவிட மூன்று மடங்கு பெரிய வளாகமான, ஐ.ஐ.டி. சென்னை, வளாகத்தில் உள்ளே நுழையும் வாகனங்கள் தணிக்கை செய்யப்படுவதுடன் அவை வெளியேறுவதும் கண்காணிக்கப்படுவதாகக் கூறும் இவர்கள், இதேபோன்ற ஒரு நடவடிக்கையை அண்ணா பல்கலைக்கழக நிர்வாகமும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

தவிர, மாணவர்களுக்கு வகுப்பு நேரம் முடிந்ததும் மாலை நேரத்தில் பிற பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் போது இதற்கு சென்று வரும் மாணவர்களுக்கு பிரத்யேக அனுமதி வழங்குவதுடன் மாலை அல்லது இரவு நேரங்களில் விடுதி மாணவர்கள் அதிக நேரம் வெளியில் செல்வதை தவிர்க்கவும் கண்காணிக்கவும் வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.