சென்னை: சென்னை மாநகரப் பகுதியில் சாலையோரம் நீண்ட நாட்களாக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் அது குறித்து மாநகராட்சி எக்ஸ் தளத்திலும், 1913 என்ற புகார் எண்ணிலும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகரப் பகுதியில் சாலையோரங்களில் பழுதடைந்த இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள். திருடுடு வாகனங்கள் போன்றவை நிறுத்தி வைப்பது நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனால் அந்த பகுதிகள் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுகிறது. இதுபோன்ற வாகனங்களை அகற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. மேலும் பலர் வேறு இடத்தில் வசித்துக்கொண்டு, மற்றொரு இடத்தில் வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனனர். இதனால் அந்த பகுதியில் வசிப்பவர்கள் அசவுகரியம் அடைகின்றன. இதுதொடர்பாக மாநகராட்சியும், மாநகர போக்குவரத்து காவல்துறையும் நடவடிக்கை எடுப்பதே இல்லை.
இந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்தது. அப்போது சாலையோரங்களில் கேட்பாரற்று கிடக்கும் பழைய வாகனங்களில் தேங்கும் நீரிலிருந்து டெங்கு பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னையின் சாலையோர பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏற்கனவே சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த தா.கார்த்திகேயன், சாலையோரம் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களை அகற்றுமாறு உத்தர விட்டார். இதில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அகற்றப்பட்டு ஏலம் விடப்பட்டன. இதன் மூலம் கிடைக்கப்பெற்ற தொகையில் மாநகரில் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. பின்னர் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
பின்னர், கடந்த ஆண்டு, மாநகராட்சி நிர்வாகம் சாலையோரம் கேட்பாரன்றி நிறுத்தப்பட்ட வாகனங்கள் அகற்றி ஏலம் விடப்படும் என்று மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா மாமன்றக் கூட்டத்தில் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, கேட்பாரற்று கிடந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அகற்றப்பட்டுள்ளன. அவற்றை ஏலம் விட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதற்கு தடையில்லா சான்று வழங்குமாறு மாநகர காவல்துறையிடம் மாநகராட்சி கோரியுள்ளது. மாநகர காவல்துறையும், இந்த வாகனங்கள் வழக்குகளில் தொடர்புடையவையா என ஆய்வு செய்து வருகிறது. இருந்தாலும், மாநகரில் பல இடங்களில் சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்கள் அகற்றப்படாமல் இருப்பதாக மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் கூறும்போது, “சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பொதுமக்கள் மாநகராட்சியின் @chennaicorp என்ற எக்ஸ் தளம் மற்றும் மாநகராட்சி புகார் தொலைபேசி எண்ணான 1913-ல் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்” என்றார்.