டில்லி:
டில்லியில் காற்று மாசுபடுவதை குறைக்கும் வகையில் வாகன நிறுத்தும் இடங்களின் கட்டணத்தை 4 மடங்கு அதிகமாக உயர்த்த உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளது.
டில்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் நியமித்த சுற்றுசூழல் மாசு தடுப்பு மற்றூம் கட்டுப்பாடு ஆணையம் இன்று கூடியது.
இதில், ‘‘தனியார் வாகன பயன்பாட்டை குறைத்து பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், தனிநபர் வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணத்தை 4 மடங்கு உயர்த்த வேண்டும்’’ என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதன்படி விரைவில் டில்லியில் வாகனங்களின் பார்கிங் கட்டணம் கடுமையாக உயரும் என தெரிகிறது. அதேபோல், ‘‘மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத பிற நேரங்களில் மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைக்க வேண்டும். வாகன கட்டுப்பாடு திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும்’’ உள்ளிட்டவையும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.