சென்னை:

மும்பையை தலைமையிடமாக கொண்டு வேதாந்தா நிறுவனம் தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை தொடங்கி தூத்துக்குடி மக்களை சிறுக சிறுக கொன்று வரும் நிலையில், தற்போது காவிரி விவசாய பாசனத்தை அழிக்கவும் முயற்சி எடுத்து வருகிறது.

காவிரி டெல்டா பகுதியில் 341 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரி வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த டெல்டா மாவட்டங்களில் நெடுவாசல் உள்பட பல இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அந்த பகுதி மக்கள், விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது வேதாந்தா நிறுவனம் காவிரி படுகையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசிடம் அனுமதிவாங்கி உள்ளது.

தமிழகத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலும் மற்றும் காவிரி டெல்டா பகுதியில் இரு இடங்கள் உள்பட நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு சிதம்பரத்திலும், காவிரி டெல்டா பகுதியில் வேதாந்தா நிறுவனமும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,   கடலூர், விழுப்புரம், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுச்சேரி உள்பட பல  பகுதிகளில் புதிதாக எண்ணெய் கிணறுகள் அமைக்க, சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. ஆகிய நிறுவனங்கள் விண்ணப்பித்து உள்ளன. வேதாந்தா நிறுவனம் 274 கிணறுகளை அமைக்கவும், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 67 கிணறுகளை அமைக்கவும் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஏற்கனவே  தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனம் தனது ஸ்டெர்லைட் ஆலை மூலம் சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்தி ஏராளமான மக்களுக்கு மூச்சு திணறல், கிட்னி பெயிலியர் உள்பட  பல்வேறு புதுப்புதுத் நோய்களை  கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக  சித்திரவதை செய்து மக்களை  கொன்று வரும் நிலையில், தற்போது டெல்டா பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க முனைப்பு காட்டி வருகிறது வேதாந்தா.