டெல்லி: பொதுமக்களின் பல ஆண்டுகால எதிர்ப்பு மற்றும் போராட்டம் காரணமாக மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில்,  ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரி வேதாந்தா குழுமம்  சார்பில் உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல்  செய்யப்பட்டு உள்ளது. ‘
தற்போது.  நாட்டில் நிலவி வரும் ஆக்சிஜன் பற்றாக்குறையை சுட்டிக்காட்டி, இலவசமாக ஆக்சிஜன் தயாரித்து வழங்குகிறோம் என கூறி, மீண்டும் ஆலையை திறக்க  முயற்சி செய்து வருகிறது. இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொதுமக்களின் போராட்டம், காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கி சூடு, ஏராளமானோர் உயிரிழப்பு போன்ற காரணங்களால்  தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. அதைத்தொடர்ந்து பல முறை ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி வருகிறது.  ஆனால், தமிழகஅரசு கொள்கை முடிவு எடுத்துவிட்டதால், அதை திறக்க அனுமதி மறக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக, நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதில்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இலவசமாக ஆக்சிஜன் தயாரித்து வழங்க தயாராக இருக்கிறோம், எங்களது ஆலையை திறக்க அனுமதி அளியுங்கள் என்று  ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது.
மனுவில்,  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்க வேண்டும். ஆலையில் உள்ள உற்பத்தி கூடத்தில் நாளொன்றுக்கு 500 டன் ஆக்ஸிஜன் தயாரிக்க முடியும். அதை இலவசமாக வழங்க முடியும் என தனது மனுவில் கூறியுள்ளது.