டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை வேறு மாநிலத்தில் அமைப்பதற்கான முயற்சிகளை வேதாந்தா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அதிக மாசு ஏற்படுத்துவதாக கூறி ஆலை இயங்க தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்தது. அதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் அந்த நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக கருதி ஏப்ரல் மாதம் விசாரிக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிமன்றம், மேல் முறையீட்டு மனுவை வரும் ஆகஸ்டு 17ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை 3 ஆண்டுகளாக மூடப்பட்டு உள்ளதால் நாள்தோறும் 5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந் நிலையில் வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் நாளிதழ்களில் ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டு உள்ளது. அதில், வேறு ஏதேனும் ஒரு மாநிலத்தில் 10 ஆயிரம் கோடி முதலீட்டில் ஆலை அமைக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆலை அமைக்க 1000 ஏக்கரில் நிலம் தேவைப்படுவதாகவும், சரக்கு போக்குவரத்து எளிதாக இருக்கும் வகையில் கடலோரங்களில், துறைமுகங்களின் அருகில் இடம் தேவைப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் வேதாந்தா குழுமம் கூறி உள்ளது. புதிய ஆலை அமைந்தால் 10 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும், 3000 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்றும் அந்த அறிவிப்பில் வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.