சாம்ராஜ்நகர்

ஜினிகாந்த் நடிக்கும் காலா திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

கன்னட மொழி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ்.   இவர் தமிழர்களுக்கு எதிராக கருத்துக்கள் கூறுவதை வழக்கமாக கொண்டவர்.   சமீபத்தில் நடந்த கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட்டை இழந்துள்ளார்.  இவர் சாம்ராஜ் நகரில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது வாட்டாள் நாகராஜ், “கர்நாடக மாநிலத்தில் பருவ மழை பொய்த்துப் போனதால் அனைத்து அணைகளிலும் போதுமான நீர் இல்லை.   மாநில மக்கள் அனைவரும் குடிக்கவும் நீரின்றி தவித்து வருகின்றனர்.   அப்படி இருக்க நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்துக்கு தண்ணீர் தேவை என குரல் கொடுக்கிறார்.  தனது அரசியல் லாபத்துக்காக கன்னட மக்களுக்கு எதிராக பேசுகிறார்.

நடிகர் ரஜினிகாந்த் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கர்நாடக அரசு பணிய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.   இவ்வாறு தொடர்ந்து கன்னடர்களுக்கு எதிராக செயல்படும் ரஜினிகாந்த் நடிக்கும் காலா திரைப்படத்தை இம்மாநிலத்தில் திரையிடக்கூடாது.   எங்கள் எச்சரிக்கையை மீறினால் கன்னட அமைப்பினர் ஒருங்கிணந்து கடும் போராட்டம் நிகழ்த்துவோம்” என எச்சரித்துள்ளார்.

இதற்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்தும் ஆதரவு தெரிவித்துள்ளார்.