டில்லி:
பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவர் அமித்ஷா கூட்டிய எம்.பி.க்கள் கூட்டத்தை வருண் காந்தி புறக்கணித்ததால் அக்கட்சியில் நிலவும் உட்கட்சி மோதல் வெளிப்படையாக தெரியவந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இது மத்திய அமைச்சர் மேனகாகாந்தியின் மகனும், பா.ஜ.க. எம்.பியுமான வருண்காந்தி, கட்சி தன்னை முதல்வர் வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
ஆனால், நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க அக் கட்சயின் மேலிடமும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் விரும்பவில்லை. அவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்னர் அலகாபாத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை முன்னிட்டு வருண் காந்தி கோஷ்டியினர், மோடி மற்றும் அவரது படத்தை மட்டும் போட்டு பேனர்களை வைத்திருந்தனர். இது பாஜக தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. வருண் காந்தியின் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை பாய இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் உ.பி. தேர்தல் குறித்து ஆலோசிக்க டில்லியில் அம்மாநில எம்.பி.க்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த 71 பா.ஜ.க. எம்.பி.க்களில் 65 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். வருண் காந்தி உட்பட 6 பேர் இந்த கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டனர்.
தன்னை முதல்வர் வேட்பாளாக அறிவிக்க பா.ஜ.க. தயங்குவதால் வருண் காந்தி அதிருப்தி அடைந்து இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.
வருண் காந்தியின் தாயாரும் மத்திய அமைச்சருமான மேனகா காந்தி, அண்மையில் துன்புறுத்தும் விலங்குகளைக் கொல்லலாம் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனால் பிரதமர் மோடி அவர் மீது அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டது. . இந்த நிலையில் அவரது மகனும் பாஜக மேலிடத்துடன் மோதுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.